கருக்குழாயில் கர்ப்பத்துடன் கொரொனா பாதித்த பெண்ணை காப்பாற்றிய மருத்துவர்கள்..!
கோவை இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவர்களின் திறமையால் கருக்குழாயில் கர்ப்பத்துடன் கொரொனா பாதித்த பெண் குணம் அடைந்துள்ளார். 40 வயதில் கருத்தரிப்பதே அரிதான நிலையில் கோவையைச் சேர்ந்த 49 வயதான பெண் மூன்றாவது முறையாக கருத்தரித்தார்.
முதல் இரண்டு முறை கருச்சிதைவு ஏற்பட்ட நிலையில் மூன்றாவது முறையாக கருத்தரித்தபோது பெண்ணின் அடிவயிற்றில் லேசான வலி ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சோதனை செய்தபோது கருப்பைக்கு பதில் கருக்குழாயில் கரு உண்டாகி இருப்பது தெரியவந்தது.
அறுவை சிகிச்சை மூலம் கருவை நீக்க முடிவு செய்ததையடுத்து அந்தப் பெண்ணுக்கு கொரொனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் கொரொனா உறுதி செய்யப்பட்டதால் தொற்று பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்வது மிகவும் ஆபத்து என்று தனியார் மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டதாலும் அதற்கு மிகவும் அதிகமான தொகை செலவாகும் என்பதால் அந்த பெண்ணின் குடும்பத்தினர் சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் அந்தப் பெண்ணை அனுமதித்தனர்.
ஐஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு ஸ்கேன் செய்த மருத்துவர்கள் கருக்குழாயில் இருந்த 11 மில்லி மீட்டர் அளவிலான 5 வார கருவை ஊசி மூலம் அகற்றியுள்ளனர். அதேநேரத்தில் பெண்ணிற்கு கொரொனாவுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பெண் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
பொதுவாக கருக்குழாயில் கரு உண்டாகி இருந்தால் அதை உரிய காலத்தில் கண்டறியா விட்டால் அது வெடித்து மிக அதிக அளவில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் நிலையில் அந்தப் பெண்ணுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.






