திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் மகன் உயிரிழப்பு… 34 வயது மாற்றுத் திறனாளி உயிரை பறித்தது கொரோனா
சென்னை முன்னாள் மேயரும் சைதாப்பேட்டை தொகுதி திமுக எம்எல்ஏவான மா.சுப்பிரமணியனின் இளைய மகன் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். 34 வயதே ஆன மாற்றுத்திறனாளியான அன்பழகன் உயிரிழந்தது திமுகவினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நகரில் திமுக முக்கியப் புள்ளிகளில் ஒருவரான மா.சுப்பிரமணியன், சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்து வருகிறார். கடந்த மாத இறுதியில் இவருக்கும் இவரது மனைவி லேசான கொரோனா அறிகுறி இருப்பது உறுதியானது.
இதையடுத்து இருவரும் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்பனர். இந்நிலையில் மா.சுப்பிரமணியனின் இளைய மகன் அன்பழகனுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவ மையத்தில் சிகிச்சையில் இருந்தார். அவருடைய உடல் நிலை திடீரென மோசமாகி இன்று காலை அன்பழகன் உயிரிழந்தார்.
34 வயதே ஆன அன்பழகன் மாற்றுத்திறனாளி ஆவார். கொரோனா தொற்று பாதிப்பால் அவருடைய உயிர் பறி போன சம்பவம் திமுகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அன்பழகன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளதுடன் மா.சுப்பிரமணியனுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.






