--- --:--:-- --

“தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா..? ஆளுநர் ஆட்சியா..?” கூட்டணி என்றும் பாராமல் பாமக நிறுவனர் ராமதாஸ் திடீர் கொந்தளிப்பு.. என்ன காரணம்?

fgd

ரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்காக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு தமிழக ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் உள்ளதற்கு பாமக நிறுவனர் டாக்டர். ராமதாஸ்,  கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை ஆளுனரால் தடுக்க முடியும் என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு என்ன தான் மரியாதை? தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா? அல்லது ஆளுநர் ஆட்சியா? என்ற வினாவுக்கு விடை தெரிய வேண்டும் என கொந்தளிப்புடன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மத்தியில் ஆளும் பாஜகவுடனும், மாநிலத்தில் ஆளும் அதிமுகவுடனும் கூட்டணியில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், சமீப காலமாக இரு அரசைகளையும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக உயர் அந்தஸ்து விவகாரம், மருத்துவ மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு விவகாரம், 69% இட ஒதுக்கீடு, இந்தித் திணிப்பு உள்ளிட்டவற்றில் ராமதாஸ் கடுமையாகவே சாடி வருகிறார்.

 

இதில் அரசு மருத்துவர் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்க சட்டம் பிறப்பித்த நிலையில், அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமதாஸ் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.தமிழக சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 15-ம் தேதியே சட்டம் நிறைவேற்றப்பட்டு, அதே நாளில் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால்,இதுவரை ஆளுநர் இன்று வரை ஒப்புதல் அளிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி சில நாட்களுக்கு முன் டாக்டர் ராமதாஸ் காட்டமாக ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

 

ஆளுநர் முட்டுக்கட்டை

 

அதில், ஒரு சட்டத்திற்கு ஒப்புதலும் அளிக்காமல், திருப்பியும் அனுப்பாமல் வைத்திருக்கலாம் என்ற ஒற்றை அதிகாரத்தை வைத்துக் கொண்டு, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கக் கூடிய சட்டத்திற்கு ஆளுநர் முட்டுக்கட்டை போடுவது எந்த வகையிலும் நியாயமல்ல என்றும், கொரோனா ஊரடங்கு மட்டும் இல்லை என்றால், 7.5% இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளிக்க தாமதிப்பதைக் கண்டித்து ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி ஆளுநர் மாளிகை முன் மாபெரும் போராட்டம் நடத்தியிருப்பேன் என்று ராமதாஸ் விளாசியிருந்தார்.

 

அத்துடன், எந்தெந்த வகைகளில் எல்லாம் ஆளுநருக்கு அழுத்தம் தர முடியுமோ, அந்தந்த வகைகளில் எல்லாம் அழுத்தம் கொடுத்து 7.5% இட ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் பெற வேண்டும் என்றும் தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்திருந்தார்.

 

மக்களாட்சியா?…. ஆளுநர் ஆட்சியா?

 

இந்த நிலையில் தான், டாக்டர் ராமதாஸ் இன்று டுவிட்டரில் அடுத்தடுத்து இரு பதிவுகளைப் போட்டு ஆளுநரை நேரடியாகவே சாடியுள்ளார். முதல் பதிவில், மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க தமிழக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றி 32 நாட்களாகியும் இன்னும் தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இது தானாக ஏற்பட்ட தாமதம் அல்ல…. திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் தாமதம்! என்று பதிவிட்டுள்ளார்.

 

அடுத்த பதிவில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை ஆளுநரால் தடுக்க முடியும் என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு என்ன தான் மரியாதை? தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா?…. ஆளுநர் ஆட்சியா? என்ற வினாவுக்கு உடனடியாக விடை காணப்பட வேண்டும்!” என்று பதிவிட்டுள்ளார்.

 

மத்தியில் பாஜகவுடன்ம் மாநிலத்தில் ஆளும் அதிமுகவுடனும் பாமக இன்னும் கூட்டணியில் உள்ளதாகவே தான் பார்க்கப்படுகிறது. அடுத்து தமிழக சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் டாக்டர் ராமதாஸ் இப்படி கடுமையாக கொந்தளித்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதற்கிடையில் பாக்டர் . ராமதாசின் இந்த கொந்தளிப்புக்கு உண்மையான காரணம் தமிழக மாணவர்கள் மீதான அக்கறையா? அல்லது வரும் சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி பேரத்தை அதிகரிக்கச் செய்யும் சூழ்ச்சியாக கூட இருக்கலாம் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் திமுக கூட்டணிக்குள் பாமகவை இழுக்கும் முயற்சிகள் சமீப நாட்களாக திரைமறைவில் தீவிர பேச்சு நடப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இதனால் பாஜக, அதிமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை இப்போதே எடுத்து, திமுக கூட்டணியில் கூடுதல் சீட்களுக்கு பேரம் நடத்தவே ராமதாஸ் இப்படி கொந்தளிக்கிறார் என்றும் பேச்சும் அடிபடுகிறது.

Leave a Reply

Right Menu Icon