குடிபோதையில் காரை தாறுமாறாக ஒட்டிய மாடல் அழகி…!
சென்னையில் குடிபோதையில் தாறுமாறாக காரை ஓட்டிய கர்நாடகாவை சேர்ந்த மாடல் அழகியை பொதுமக்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். அந்த பெண்ணை பாரதிய ஜனதா பிரமுகர் ஜாமீனில் அழைத்து சென்றார்.
கோடம்பாக்கத்திலிருந்து தாறுமாறாக காரை இயக்கி வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய பெண்ணை ஆற்காடு சாலை அருகே பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். அப்போது குடிபோதையில் இருந்த அந்த பெண் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் முழக்கமிட பாரதிய ஜனதா சென்னை மாவட்ட செயலாளர் பாலாஜி அந்த பெண்ணுக்கு ஆதரவாக காவல்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பெண்ணின் காரை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்வதாக உறுதியளித்ததால் பொதுமக்கள் அமைதி காத்தனர்.
பின்னர் அந்த பெண்ணை பாரதிய ஜனதா பிரமுகர் பாலாஜி ஜாமீனில் அழைத்து சென்றார். கோடம்பாக்கத்தை சேர்ந்த சிலர் கொடுத்த புகாரின் பேரில் குடிபோதையில் காரை இயக்கிய பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.







