“அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்!!” சமூக பிரச்னையில் தொடர்ந்து வெளுத்து வாங்கும் உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள்
அரசுத் துறையில் உள்ளவர்கள் தங்கள் ஊதியத்தை தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் என, விவசாயிகள் விளைவித்த நெல்லை கொள்முதல் செய்ய மூடை ஓன்றுக்கு ரூ.40 லஞ்சம் பெறுவதாக எழுந்த புகாரில் உயர் நீதி மதுரை கிளை நீதிபதிகள் கடுமையாக சாடியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக சமூகம் சார்ந்த பிரச்னைகளில் மதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அமர்வு சாட்டையை சுழற்றி வருவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில், பொது நலன் சார்ந்த வழக்குகளை மூத்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்துகிறது.இந்த நீதிபதிகள் முன் விசாரணைக்கு வரும் வழக்குகளில் தினம் தினம் சமூக அக்கறையுடன் இந்த நீதிபதிகள் சாட்டையடியாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இன்று சென்னையைச் சேர்ந்த சூரிய பிரகாசம் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்தது. விவசாயிகளைக் காக்க தமிழகம் முழுவதும் போதுமான நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்கவும், விவசாயிகளிடமிருந்து விரைவாக நெல்லை கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவும், விவசாயிகளுக்கு உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என்பது தான் வழக்கின் சாராம்சம்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நெல்லை கொள்முதல் செய்ய மூடை ஒன்றுக்கு ரூ.40 லஞ்சமாக பெறப்படுவதாகவும் சூர்யபிரகாசம் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் இதைக் கேட்டு அதிருப்தியில் கூறுகையில், இரவு பகல் பாராமல் விவசாயம் செய்து பிறருக்கு உணவூட்டும் விவசாயிகள், தங்களது உற்பத்திப் பொருட்களை சரியான நேரத்தில் விற்பனை செய்ய இயலாமல், வறுமையில் சிக்கி, தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, அரசு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, உரிய கவனம் செலுத்த வேண்டும்.
லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்
உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் ஒருபக்கம் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகும் சூழலில், மறுபுறம், விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சமாக அரசு அதிகாரிகள் பெறுவது வேதனையானது. அரசு அதிகாரிகள் தங்களின் ஊதியத்தை தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமமானது என்றும் விமர்சித்தனர்.
மேலும், தமிழகத்தில் எத்தனை நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன? விவசாயிகள் கொள்முதல் செய்வதற்காக கொள்முதக் நிலையங்களுக்கு கொண்டு வரும் நெல் மூட்டைகள் பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது? விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ? என அடுத்தடுத்து கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். இதுதொடர்பாக நுகர்பொருள் வாணிப கழக இயக்குநர் நாளை உரிய விளக்கமளிக்க வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
சமீப நாட்களாகவே உயர் நீதிமன்ற கிளையில் வரும் சமூக நலன் சார்ந்த பொதுநல வழக்குகளில் மூத்த நீதிபதிகளான கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் சாட்டையை சுழற்றி வருகின்றனர். தேசிய அளவில் விளையாட்டில் 90 பதக்கங்களை ஈட்டித் தந்த மாற்றுத் திறனாளிக்கு , அவர் 10-ம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார் என்ற கல்வித் தகுதி அடிப்படையில் பியூன் வேலை வழங்கியதை நீதிபதிகள் விமர்சித்திருந்தனர். கிரிக்கெட் வீரர் டெண்டுல்கருக்கு இப்படி பியூன் வேலை கொடுப்பீர்களா? என்ற நீதிபதிகள், அரசியல் ஸ்டார்,சினிமா ஸ்டார், கிரிக்கெட் ஸ்டார் மட்டும் தான் உங்களுக்கு பெரிதா? என விமர்சித்திருந்தனர்.
சாட்டையை சுழற்றிய நீதிபதிகள்
நேற்று முன் தினம் லெட்டர் பேடு கட்சிகளை கடுமையாக சாடியிருந்தனர். வெறுமனே லெட்டர் பேடு மூலம் கட்சி நடத்தி விளம்பரம், சுய லாபம் பெறுவோரை கட்டுப்படுத்த வேண்டும். ஒரு கட்சி தொடங்க அட்லீஸ்ட் 25 ஆயிரம் உறுப்பினர்களாவது இருக்க வேண்டியது அவசியம் என தேர்தல் ஆணையம் கண்டிப்பு காட்ட வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.
நேற்று கூட டாஸ்மாக் தொடர்பான ஒரு பொது நல வழக்கில், 2016 தேர்தல் அறிக்கையில் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை குறைப்போம் என கொடுத்த வாக்குறுதி என்னாச்சு ? ஆட்சிக்கு வந்த இத்தனை வருடங்களில் எத்தனை கடைகள் மூடப்பட்டன? அப்போதும் தற்போதும் தமிழகத்தில் உள்ள கடைகளின் எண்ணிக்கை எத்தனை என்ற பட்டியலை ஒப்படைக்க வேண்டும் என ஆளும் அதிமுக அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியிருந்தனர். இப்படி தொடர்ந்து மதுரை கிளை நீதிபதிகள் சாட்டையை சுழற்றுவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்றே கூறலாம்.






