கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமமுக பொருளாளர் வெற்றிவேல் உயிரிழந்தார்
கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சையில் இருந்த அமமுக பொருளாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான வெற்றிவேல் காலமானார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் வெற்றிவேல், கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 5-ந் தேதி முதல் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவரது உடல் நிலை மோசமானது. அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் இன்று மாலை பிரிந்தது.
ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் சென்னையில் அதிமுகவின் முக்கியப் புள்ளிகளில் ஒருவராக வெற்றிவேல் திகழ்ந்தார். அதிமுகவின் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு 2011 -ம் ஆண்டு வெற்றி பெற்றவர் வெற்றிவேல். ஜெயலலிதா போட்டியிடுவதற்காக ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
பின்னர் 2016-ல் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். ஆனால், அமமுகவை டிடிவி தினகரன் தொடங்கிய போது அவரது தீவிர ஆதரவாளராக மாறினார். இதனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களில் வெற்றிவேலும் ஒருவர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை டிடிவி தினகரன் தொடங்கியது &தல் அவருக்கு நெருக்கமானவராகவும், அக்கட்சியின் பொருளாளராகவும் வெற்றிவேல் இருந்து வந்தார். கொரோனா பாதிப்பு காரணமாக அவர் உயிரிழந்தது அமமுகவினரை பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.







