--- --:--:-- --

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் காலமானார்… நள்ளிரவில் மரணம்.. காலையில் உடல் தகனம் செய்யப்பட்டது

9.1

மிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் காலமானார். 93 வயதான தவசாயி அம்மாள் உடல் நலக்குறைவால் நள்ளிரவு12.15 மணிக்கு காலமான நிலையில், அவரது உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் காலை 9 மணியளவில் அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது.

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள், வயது முதிர்வு காரணமான உடல்நலப் பிரச்னைகளால், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நள்ளிரவு 12.15 மணியளவில் காலமானார். உடன் அவரது உடல் சொந்த ஊரான எடப்பாடி அருகிலுள்ள சிலுவம்பாளையத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

தாயாரின் மறைவு குறித்த தகவல் அறிந்தவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் இருந்து காரில் விரைந்தார். இன்று காலை 6.30 மணிக்கு சிலுவம்பாளையம் வந்த முதல்வர் எடப்பாடி தனது தாயாரின் உடலுக்கு மலர் மாலை வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள், சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் மற்றும் அதிமுக நிர்வாகிகள், முக்கியப் பிரமுகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாயாரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கையாக அதிக கூட்டம் சேர்வதை தவிர்க்க தவசாயி அம்மாளின் உடல் தகனம் காலையிலேயே நடத்த முடிவு செய்யப்பட்டது.சென்னையிலிருந்து விரைந்து வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது தாயாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

 

இன்று காலை 8 மணியளவில் அவருடைய உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப் பட்டது. இந்த ஊர்வலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் தங்க மணி, செங்கோட்டையன், எம்.ஆர். விஜயபாஸ்கர், கே.பி. அன்பழகன் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முகக் கவசம் அணிந்தபடி பங்கேற்றனர். பின்னர் சிலுவம் பாளையம் மயானத்தில் தவசாயி அம்மாளின் உடல் தகனம் செய்யப்பட்டது.

 

Leave a Reply

Right Menu Icon