உயிரிழந்த சீன வீரர்களின் உடல்களை 70 ஆண்டுகளுக்கு பிறகு ஒப்படைத்த கொரியா..!
கொரிய தீபகற்ப போரின் போது பலியான 117 சீன வீரர்களின் உடல்கள் தென் கொரியாவில் இருந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த 1950 ஆம் ஆண்டு வட கொரியா, தென் கொரியா இடையே போர் ஏற்பட்டது.
3 ஆண்டுகள் நடந்த இந்தப் போரில் தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும், வட கொரியாவுக்கு ஆதரவாக சீனா, சோவியத் யூனியன் உள்ளிட்ட நாடுகளும் இருந்தன. இந்த போரில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான போர் வீரர்கள் பலியாகினர்.
இரு நாடுகளிலும் சுமார் 25 லட்சத்துக்கும் அதிகமான பொது மக்கள் அகதிகளாகினர். கொரியப் போர் விளைவால் சுமார் 70 ஆண்டுகளாக தென் கொரியாவுக்கும் சீனாவுக்கும் பகை இருந்து வருகிறது. இந்த நிலையில் சீனாவுடன் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் போரில் இறந்த சீன வீரர்களின் உடல்களை திருப்பி அனுப்பும் ஒப்பந்தத்தில் 2014 ஆம் ஆண்டு தென் கொரியா கையெழுத்திட்டது.
அதன்படி கொரியப் போரில் உயிரிழந்த 599 சீன வீரர்களின் உடல்களை கடந்த 7 ஆண்டுகளாக சீனாவுக்கு அனுப்பி வைத்து வருகிறது தென் கொரியா. பலியானவர்களுக்கு சொந்தமான 1368 உடைமைகளும் அனுப்பப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக தற்போது 117 சீன வீரர்களின் எஞ்சிய உடல் பாகங்கள் நேற்று தென் கொரியாவின் இன்சியான் நகரில் இருந்து சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
சீனாவில் உள்ள சென்யாங் நகரில் உள்ள மாற்றயஸ் பூங்காவில் பொதுமக்கள் முன்னிலையில் ராணுவ மரியாதையுடன் போர்வீரர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





