திருச்சியில் பெரியார் சிலைக்கு “காவிச் சாயம்” பூசி, “காவித் துண்டு” அணிவித்து அவமதிப்பு..! மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்!!
திருச்சி அருகே மர்ம நபர்களால் பெரியார் சிலைக்கு காவிச் சாயம் பூசியும், காவித் துண்டு அணிவித்தும் அவமரியாதை செய்யப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருச்சி அருகே இனாம் குளத்தூர் சமத்துவபுரத்தில் மார்பளவு பெரியார் சிலை உள்ளது. இந்த சிலைக்கு நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் காவிச் சாயம் பூசியும், காவித் துண்டு அணிவித்தும் அவமரியாதை செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதால் மேலும் மேலும் மக்களிடம் இருந்து புறக்கணிக்கப்படுவோம் என்பதை இவர்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள்? திருச்சி இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பெரியார் ஒரு இயக்கத்தின் தலைவர் அல்ல; தமிழ் இனத்தின் தலைவர். அவரை அவமதிப்பதாக நினைத்து அச்செயல் செய்பவர்கள் தங்களைத் தாங்களே அவமரியாதை செய்து கொள்கிறார்கள்! என மு.க.ஸ்டாலின் பதிவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.







