வேளாண் மசோதா விவசாயிகளை பாதிக்காது என கூறியுள்ள முதல்வர்..!
வேளாண் மசோதா விவசாயிகளை பாதிக்காது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வேளாண் மசோதா குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் இந்த மசோதாவில் விவசாயிகளை பாதிக்கும் அம்சங்கள் எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகள் விலை வீழ்ச்சி போன்ற பாதிப்பிலிருந்து காப்பாற்றப்படுவர் என்றும் முதல்வர் கூறியுள்ளார். வேளாண் விளைபொருட்களை எந்த இடத்தில் வேண்டுமானாலும் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவர்.
விவசாயிகளுக்கு விற்பனை செய்வதில் முழுமையான சுதந்திரத்தை இந்த மசோதா வழங்குவதாக தெரிவித்துள்ள முதல்வர் இதற்காக விவசாயிகள் வணிகர்கள் எந்தவிதக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மசோதாவால் எவ்விதத்திலும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வணிக செயல்பாடுகள் பாதிக்காது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கார்ப்பரேட் நிறுவனங்கள், அத்தியாவசிய பொருட்கள் பதுக்குவதற்கு வழி வகுக்கும் என்ற கூற்றில் துளியும் உண்மையில்லை என முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது குறைந்தபட்ச ஆதார விலையில் நடைபெற்று வரும் கொள்முதல் போன்றவை எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என கூறியுள்ள முதல்வர் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் இந்த சட்டங்களையும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அரசியல் ஆக்குவதாக விமர்சித்துள்ளார்.
தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்பதை விவசாயி ஆகிய தான் உணர்ந்ததால் அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.







