நாடு முழுவதும் நாளை நடைபெறவிருக்கும் நீட் தேர்வு..!
நீட் குறித்து அச்சம் காரணமாக மதுரையில் மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில் திட்டமிட்டவாறு நாளை நீட் தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் இருந்து சுமார் ஒரு லட்சத்து 18 ஆயிரம் மாணவர்கள் இந்த தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் எனப்படும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு நாளை நடைபெறுகிறது. இந்த தேர்வு எழுதுவதற்காக நாடு முழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்திலிருந்து மட்டும் ஒரு லட்சத்து 18 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். கொரொனா தடுப்பு நடவடிக்கையாக மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தனிமனித இடைவெளியுடன் இருக்கைகளை அமைப்பதற்காக வழக்கத்தைவிட தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்வு எழுதும் மாணவர்கள் முகக்கவசம், கையுறை அணிந்து வருவதோடு சானிடைசர், நுழைவு அட்டை, அடையாள அட்டை ஆகியவற்றை தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு உடலை தொட்டு செய்யப்படும் பரிசோதனைகள் இல்லாமல் நீளமான கைப்பிடியுடன் கூடிய மெட்டல் டிடக்டர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 99.4 பாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெப்பநிலை இருக்கும் மாணவர்கள் தனி அறையில் அமர வைக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழகத்தில் வேலூரில் 2 தேர்வு மையங்கள் மாற்றப்பட்டுள்ளன. இதுதொடர்பான அறிவிப்பு மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.






