இ-பாஸ் ரத்து.. கோயில்கள் திறப்பு.. பஸ் விட்டாச்சு…சகஜ நிலைக்கு திரும்புகிறதா தமிழகம்? கொரோனா குறித்து உலக சுகாதார நிறுவனமோ அபாய எச்சரிக்கை!!
ஊரடங்கில் ஏகப்பட்ட தளர்வுகள் இன்று முதல் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் சகஜ நிலைக்கு மக்கள் திரும்ப ஆரம்பித்துள்ளனர். ஆனால் கொரோனாவை கட்டுப்படுத்தாமல் தளர்வுகளை கட்டவிழ்த்து விடுவது பேராபத்தில் முடியும் என உலக சுகாதார நிறுவனம் அபாய எச்சரிக்கை விடுத்திருப்பது கவலை தரும் விஷயமாக உள்ளது.
உலகை கடந்த 8 மாதங்களுக்கு மேலாக அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வரும் கொரோனா தொற்றால் அத்தனை நாடுகளும் கதிகலங்கிப் போய் உள்ளன. ஆரம்பத்தில் இந்த கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வரிசையாக ஒவ்வொரு நாடுகளும் ஊரடங்கு, பொது முடக்கம், அவசர நிலை, லாக் டவுன் என பல்வேறு பெயர்களில் அவசர உத்தரவுகளைப் போட்டு பொது மக்களை வீடுகளுக்குள் முடங்கச் செய்தன.
அனைத்து வகை போக்குவரத்தும் முடக்கப்பட்டது. தொழில்கள் முடங்கின. கடைகள் அடைக்கப்பட்டது. அனைத்து கோயில்கள், வழிபாட்டு தலங்கள், சுற்றுலா, பொழுதுபோக்கு இடங்கள் என அனைத்தும் அடைக்கப்பட்டன. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது தடை விதிக்கப்பட்டது. ஆனால் இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளால் வேறு விதமான மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
வேலை இழப்பு, உற்பத்தி பாதிப்பு, பொருளாதார சீரழிவு என அனைத்து நாடுகளுமே பெரும் பாதிப்புக்கு ஆளாகத் தொடங்கின. இதில் உலகின் முன்னேறிய வல்லரசு நாடுகளே பெரும் பொருளாதார தள்ளாட்டத்துக்கு ஆளாகின. இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட வளரும் நாடுகளின் நிலைமை சமாளிக்க முடியாத நிலைக்கு சென்றது. இப்படி பல நாடுகளும் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளான நிலையில், வாழ்வாதாரம் இழந்த மக்களும் புலம்பத் தொடங்கினர்.

இதைத் தொடர்ந்து கொரோனா பரவல் தாக்கம் அதிகரித்த போதும், வேறு வழியின்றி கட்டுப்பாட்டில் தளர்வுகளை இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக அறிவிக்க ஆரம்பித்தன.
இந்தியாவில் மார்ச் 25 முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு 8-வது முறையாக இந்த மாதம் முழுவதற்கும் நீடிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் அன்லாக் என்ற பெயரில் தளர்வுகள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டும் வருகின்றன. இந்த மாதம் அன்லாக் 4.0 எனக் கூறி, இ-பாஸ்கூடாது… மெட்ரோ ரயில் இயக்கலாம். பொதுப் போக்குவரத்தை தொடங்கலாம். கோயில்களை திறக்கலாம். 100% பணியாளர்களுடன் அனைத்து தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் இயங்கலாம் என பல்வேறு தளர்வுகளை மத்திய அறிவித்தது.
அதன்படி தமிழக அரசும் இன்று முதல் மேலும் பல்வேறு தளர்வுகளை அறிவித்து, இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. மாநிலத்திற்குள் செல்ல இ.பாஸ் தேவையில்லை. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்து, அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் திறக்க அனுமதி, தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், மால்கள் திறக்க அனுமதி என பல்வேறு தளர்வுகள் இன்று முதல் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.கூடவே முகக் கவசம் அவசியம், சமூக இடைவெளி கட்டாயம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆனால் மக்களோ இந்த தளர்வுகளை அமோகமாக வரவேற்று, கொரோனா பற்றிய அச்சம் ஒரு பக்கம் இருந்தாலும் சகஜ நிலைக்கு திரும்பத் தொடங்கி விட்டதை காணமுடிகிறது. இதற்கு ஒரே சாட்சி சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுவதை கூறலாம்.

ஆனால், இந்தியா முழுக்கவும் சரி, தமிழகத்திலும் சரி கொரோனாவின் தாக்கம் குறைந்ததா? கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா? என்றால் இல்லவே இல்லை என்பது தான் கள நிலவரமாக உள்ளது. இந்தியாவில் தினசரி பாதிப்பு இப்போது சராசரியாக 75 ஆயிரம் என்ற அளவிலும், தமிழகத்தில் சராசரியாக 6 ஆயிரம் என்ற அளவிலும் உச்சத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று முதல் கூடுதல் தளர்வுகளால் கொரோனா பரவல் அதிகரிக்குமோ என்ற அச்சம் ஒரு பக்கம் நிலவுகிறது.
அபாய எச்சரிக்கை
இதை மெய்ப்பிப்பது போல உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதோனம் அபாய எச்சரிக்கை ஒன்றை உலக நாடுகளுக்கு விடுத்துள்ளார்.பெருந்தொற்று முடிவுக்கு வந்துவிட்டதாக எந்த நாடும் சொல்ல முடியாது. உண்மை என்னவெனில் இந்த வைரஸ் மிக எளிதாக பரவும். எனவே, கொரோனாவை கட்டுப்படுத்தாமல், திறந்து விடுவது என்பது பேரழிவிற்கான செயலாகும்.
மக்கள் அதிக அளவு கூடும் இடங்களில் இருந்தே பெரிய அளவில் தொற்று பரவல் ஏற்படுகிறது கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தாமல் கட்டுப்பாடுகளை தளர்த்தி திறந்து விடுவது பேரழிவிற்கான செயல் என்று அபாய எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இந்தியாவிலும், தமிழகத்திலும் இந்த தாராள ஊரடங்கு தளர்வால் கொரோனா நிலவரம் கலவரமாகுமா? இல்லை சகஜ நிலைக்கு நாடு திரும்புமா? என்பது ஓரிரு வாரங்களில் தெரியத்தான் போகிறது.







