குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய நிலக்கடலை..! காப்பாற்றிய மருத்துவர்களுக்கு பாராட்டு..!
கோவை அரசு மருத்துவமனையில் ஒன்றரை வயது குழந்தையின் மூச்சுக் குழாயில் சிக்கிய நிலக்கடலையை அகற்றி குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு பாராட்டு குவிகிறது.
கடந்த 18 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் ஆலங்காடு பகுதியை சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை மலர்விழி நிலக்கடலை சாப்பிடும்போது புரை ஏறி மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றனர்.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையின் உடல் நிலை மோசமாக இருந்ததால் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். குழந்தைக்கு எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் பரிசோதனைகள் செய்து பார்த்ததில் மூச்சுக் குழாயில் அடைப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து உடனடியாக குழந்தைக்கு மயக்க மருந்து செலுத்தி உள்நோக்கு கருவி மூலம் மூச்சுக்குழாயில் இருந்த நிலக்கடலையை தொண்டை துறை தலைவர் அலி சுல்தான் தலைமையிலான மருத்துவ குழுவினர் அகற்றினர்.
குழந்தைகளுக்கு மூச்சு குழாயில் விட்டம் 5 மில்லி மீட்டர் அளவில் தான் இருக்கும் எனக் கூறும் மருத்துவர்கள் உணவுப் பொருட்களையோ, சிறு கற்களையே குழந்தைகள் வாயில் போட்டுக் கொள்ளாமல் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.







