சாதனை படைக்கும் “டாஸ்மாக்” விற்பனை..! நேற்று ஒரே நாளில் ரூ.250 கோடியை தாண்டியது..! மதுரை, சென்னை, திருச்சியில் “டாப்” சேல்ஸ்!!
தமிழகத்தில் என்றுமில்லாத சாதனையாக மது விற்பனையில் டாஸ்மாக் சாதனை படைத்துள்ளது. நேற்று ஒரே நாளில் விற்பனை 250.25 கோடிக்கு டாஸ்மாக் சரக்குகள் விற்றுத் தீர்ந்து இதுவரையிலான சாதனையை முறியடித்துள்ளது.
இந்த கொரோனா காலத்தில் நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்துக்கு சென்று, வேலை வாய்ப்பும் குறைந்து தனிநபர் தினசரி வருவாயும் பெரிதும் சரிந்துள்ளது. ஆனால், இந்த கொரோனா காலத்திலும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை மட்டும் குறைந்தபாடில்லை. தினசரி சராசரியாக, 100 கோடி ரூபாய் என்ற அளவுக்கு விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.
அதிலும், தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு கடந்த 2 மாதங்களாக ஒவ்வொரு ஞாயிறும் தளர்வில்லாத ஊரடங்கு அறிவிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்படுகின்றன. ஆனால் குடிமகன்களோ முதல் தினமான சனிக்கிழமையே வாங்கி ஸ்டாக் வைத்து விடுவதால் அன்று விற்பனை இரு மடங்காகி விடுகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் சராசரியாக, 180 கோடி ரூபாய்க்கு சரக்கு வகைகள் விற்பனையாகின.
இதில் கடந்த வாரம் சுதந்திர தினத்தை முன்னிட்டு சனிக்கிழமையும் விடுமுறை விடப்பட்டதால், தொடர்ந்து 2 நாள் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் முதல் நாளான வெள்ளிக்கிழமை, காலை முதல் இரவு கடை மூடும் வரை, கடைகளில் கூட்டம் அலைமோதி அன்று மட்டும் 248 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி அடேங்கப்பா என்ற அளவுக்கு சாதனையாக பார்க்கப்பட்டது.

இந்த சாதனை ஒரே வாரத்தில் முறியடிக்கப்பட்டு நேற்று ஒரே நாளில் 250.25 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இன்று ஞாயிறு முழு ஊரடங்கு என்பதாலும், இன்று முகூர்த்த தினம் என்பதால் ஏகப்பட்ட திருமணங்களும் நடைபெறுவதால் நேற்று ஒரே நாளில் சரக்குகள் மளமளவென விற்பனையாகி ரூ.250.25 கோடியை எட்டியுள்ளது. டாஸ்மாக் சரித்திரத்தில் ஆங்கிலப் புத்தாண்டு, தீபாவளி தினங்களில் தான் இந்த அளவுக்கு ரூ.200 கோடிக்கு மேல் விற்பனையாவது வழக்கம். ஆனால் 250 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் விற்பனை என்பது புதிய சாதனையாகும்.
இதில், இந்த கொரோனா காலத்தில் அதிக விற்பனை என்பதில் மதுரை மண்டலம் தான் தொடர்ந்து பட்டியலில் டாப் இடத்தில் உள்ளது. நேற்று மதுரை மண்டலத்தில் ரூ.52.45 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.51.27 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது.சென்னை மண்டலத்திலும் ரூ. 50.65 கோடிக்கும் ,சேலம் மண்டலத்தில் ரூ. 49.30 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.46.58 கோடிக்கும் என சகட்டுமேனிக்கு மது விற்பனை எகிறியுள்ளது.
ஒரே நாளில் ரூ.250 கோடியை தாண்டியது..
மேலும், கடந்த வாரம் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் ரூ.248 கோடிக்கு மது விற்பனையாகி இருந்தது. ஆனால் இன்று ஒரு நாள் விடுமுறைக்கே முதல் நாளில் ரூ.250 கோடிக்கு மேல் மது விற்பனையாகி பெரிய ரிகார்டு பிரேக் ஆகியுள்ளது. அடுத்த ஞாயிறும் முகூர்த்த நாள் என்பதால் நேற்றைய டாஸ்மாக் விற்பனை சாதனை முறியடிக்கப்படும் என்றே தெரிகிறது.







