சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியுள்ள மத்திய அரசு..!
சினிமா மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியுள்ள மத்திய அரசு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருத்தப்பட்ட தடையால் கடந்த 5 மாதங்களாக திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்புகள் நடைபெறவில்லை.
இந்நிலையில் படப்பிடிப்புகளுக்கு தற்போது மத்திய அரசு கட்டுப் பாடுகளுடன் கூடிய விலக்கு அளித்துள்ளது. விதிமுறைகளை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதன்படி படப்பிடிப்பின் போது குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பனைக் கலைஞர்கள் சிகை அலங்கார கலைஞர்கள் கவச உடை அணியவேண்டும் முகக் கவசங்கள், கையுறைகள் உள்ளிட்டவை படப்பிடிப்பு தளத்தில் போதுமான அளவு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் படப்பிடிப்பு தளங்களில் 6 அடி தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கேட்டுக்கொண்டுள்ளார்.
குறைந்த அளவிலான பொருட்களே படப்பிடிப்பிற்கு பயன்படுத்தப்படும் என்றும் அப்படி பயன்படுத்தும் பொருட்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







