--- --:--:-- --

புதுச்சேரியில் இ-பாஸ் நடைமுறை இன்று முதல் ரத்து..! தமிழகத்தில் அறிவிப்பு எப்போது?

Pondy-E-PAss-

புதுச்சேரி மாநிலத்தில் இ-பாஸ் நடைமுறை இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

 

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்தது. தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், மாநிலத்திற்கு உள்ளே வெளியே செல்லவும் இ-பாஸ் நடைமுறை உள்ளது.புதுச்சேரியிலும் மாநிலத்திற்கு வெளியே செல்லவும், உள்ளே நுழையவும் இ – பாஸ் கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

 

ஊரடங்கில் அடுத்தடுத்து தளர்வுகளை அறிவித்து வரும் மத்திய அரசு, இ-பாஸ் முறை தேவையற்றது என்று ஏற்கனவே அறிவித்திருந்த போதும் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்த நடைமுறை தொடர்ந்தது. இந்த இ-பாஸ் முறையால் பல்வேறு குளறுபடிகள் ஏற்படவே, தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் உடனடி இ-பாஸ் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் அறிவித்தார்.

ஆனால் இந்த உடனடி இ-பாஸ் என்பதும் கேலிக்கூத்து போல் அமைந்து விட்டது. சங்கி மங்கி என்ற பெயரில், சுனா பானா என்ற பெயரில், வாகன எண் 0000 என்று விண்ணப்பத்தாலும் இ.பாஸ் வழங்கப்படுவது தான் வேடிக்கையாகி விட்டது. இப்படி இஷ்டத்திற்கு மக்கள் இபாஸ் பெற்று பயன்படுத்த ஆரம்பிக்க சாலைகளில் வாகன போக்குவரத்து எக்கச்சக்கமாகியுள்ளது.

 

இ – பாஸ் ரத்து!

இந்நிலையில் இ-பாஸ் நடைமுறை தேவையற்றது என அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா நேற்று எழுதிய கடிதத்தில் எச்சரிக்கை விடுவது போல் தெரிவித்திருந்தார். மத்திய அரசின் இந்த உத்தரவை பின்பற்றி புதுச்சேரி மாநிலத்தில் இன்று முதல் இ – பாஸ் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது போல் தமிழக அரசும் இ-பாஸ் முறையை ரத்து செய்வது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடும் என எதிர் பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon