கொரோனா ஊரடங்கை மீறி ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா… திருப்பூர் வடக்கு மாவட்ட காங்., தலைவர் மீது வழக்கு!!
கொரோனா ஊரடங்கை மீறியும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் தமிழக காங். தலைவர் கே.எஸ். அழகிரியை வரவழைத்து ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழாவை கொண்டாடியதாக திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோபி மீது போலீசார் வழக்குத் தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜீவ் காந்தி பிறந்த நாள்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழாவை கடந்த 20-ந் தேதி தமிழகம் முழுவதும் காங்கிரசார் கொண்டாடினர். திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்த ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழாவில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார். திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோபி ஏற்பாட்டில் மாவட்டத்தில் காங்கேயம், வெள்ளக்கோவில், நத்தக் காடையூர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த விழாவில் வைத்தும், ராஜீவ் காந்தி படத்துக்கு மாலை அணிவித்தும் , காங்கிரஸ் கொடியேற்றி வைத்தும், கல்வெட்டு திறப்பு என நிகழ்ச்சிகளில் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிகளில், கொரோனா ஊரடங்கை மீறி காங்கிரசார் பெருமளவில் பங்கேற்றது சர்ச்சையாகியுள்ளது.

தடுப்பு நடவடிக்கை
ஏனெனில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா பரவல் விஸ்வரூபமெடுத்து வரும் நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் பாதிப்பும், உயிரிழப்பும் மிகக் குறைவாக பதிவாகி ஆரம்பம் முதலே கட்டுப்பாட்டில் உள்ளது. திருப்பூரின் அண்டை மாவட்டங்களான கோவை, ஈரோடு, சேலம், திண்டுக்கல் மாவட்டங்களில் பாதிப்பு பல மடங்காக இருந்த போதும் திருப்பூரில் இதுவரை மொத்தமே 1947 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு காரணம் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் தீவிரமாக ஈடுபட்டு கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது தான்.

“6 பேர் மீது வழக்குப்பதிவு”
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழாவை, சமூக இடைவெளியை பின்பற்றாமலும், ஊரடங்கு விதிகளை மீறியும் நடத்தியது சர்ச்சையானது. இதைத் தொடர்ந்து இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்த திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோபி உள்ளிட்ட 6 பேர் மீது வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதாக காங்கிரசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








