“நாளை முழு ஊரடங்காக இருந்தாலும் திருமணங்களுக்கு பஞ்சமில்லை!!” தடையை மீறி களை கட்டிய மண்டபங்கள்!!
கொரோனா ஊரடங்கில், கடந்த இரு மாதங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நாளை நல்ல முகூர்த்த நாள் என்பதால் ஏராளமான திருமணங்கள் நடைபெற உள்ளன. மண்டபங்களில் திருமணம் நடத்த தடை இருந்த போதும் அதை பொருட்படுத்தாமல் பல மண்டபங்கள் ஜோராக களை கட்டியுள்ளன.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு போடப்பட்டது முதலே, திருமண மண்டபங்களுக்கான தடையும் நீடிக்கிறது. இதனால் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட பல திருமணங்கள் அடுத்தடுத்து தள்ளிப் போடப்பட்டன. சிலரோ அரசின் வழிகாட்டுதல்படி எளிமையாக திருமணங்களை வீடுகளிலேயே நடத்தியதை காண முடிந்தது. நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை தள்ளிப் போட்டவர்கள், கொரோனா ஊரடங்கு 5 மாதங்களாக தொடரும் நிலையில், இனியும் தாமதிக்க முடியாது என்ற மனநிலைக்கு வந்து விட்டதாக தெரிகிறது.

“ஆவணியில் வளர்பிறை முகூர்த்தம்”
பொதுவாக ஆவணி மாதத்தில் திருமணம் நடத்துவது நல்லது என்பதால் இந்த மாதத்தில் அதிக அளவில் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆவணி மாதம் பிறந்த அடுத்த சில தினங்களிலேயே நேற்று நல்ல முகூர்த்த நாள் தொடங்கிய முதல் நாளே திருமண விழாக்கள் களை கட்டத் தொடங்கி விட்டன. அடுத்து நாளை (ஞாயிறு), நாளை மறுநாள் திங்கட்கிழமை மற்றும் வரும் 28,30, 31 ஆகிய நாட்களும் ஆவணியில் வளர்பிறை முகூர்த்தங்களாகும். எனவே இந்த ஆவணியை விட்டால் அடுத்து ஐப்பசியில்தான் திருமணத்திற்கு உகந்த மாதம் என்பதில் தள்ளி வைக்கப்பட்ட திருமணங்களை இனியும் தாமதிக்கக் கூடாது பலரும் துணிந்து விட்டதாகவே தெரிகிறது.
இதில் நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என அரசு அறிவித்திருந்த போதிலும், ஏற்கனவே திருமண மண்டபங்களுக்கு தடை போட்ட நிலையிலும், அதையெல்லாம் யாரும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.
நாளை நடைபெற உள்ள திருமணத்திற்காக பெரும்பாலான மண்டபங்கள் பிளக்ஸ், பேனர், மின்விளக்கு அலங்காரம் என ஜோராக ஜொலிக்கின்றன. அதிகாரிகளும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. இதே போன்று அடுத்த ஞாயிறும் ஏராளமான திருமணங்கள் நடைபெற உள்ள நிலையில், முழு ஊரடங்கு கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கைகள் குவிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.







