“ஓபிஎஸ் முதல்வர் என்ற போஸ்டரால் வெடித்த கலகம்”!! முதலில் தனியே ஆலோசனை…! அப்புறம் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்சை 2 தடவை சந்தித்த மூத்த அமைச்சர்கள்..! அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு!!
துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சின் சொந்தத் தொகுதியான போடியிலும், தேனி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஓ.பி.எஸ்.தான் நிரந்தர முதல்வர் என ஒட்டப்பட்ட போஸ்டர் அதிமுகவில் பெரும் கலகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் முதல்வர் அதிகாரப் போட்டியில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இடையே மோதல் இருப்பது உறுதியான நிலையில், அதிமுக மூத்த அமைச்சர்கள் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் முதலில் தனியாக அவசர ஆலோசனை நடத்திய பின், ஓ.பி.எஸ்.சையும், இபிஎஸ்சையும் அடுத்தடுத்து சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபை பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஆறேழு மாதங்கள் உள்ள நிலையில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற சர்ச்சை கடந்த ஒரு வார காலமாகவே பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. அமைச்சர்கள் செல்லூர் ராஜுவும், ராஜேந்திர பாலாஜியும் கூறிய இருவேறு கருத்துகளால் அதிமுகவுக்குள் இன்னும் கோஷ்டிப் பூசல் இருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயக்குமார் போன்றோரும் தங்கள் கருத்தை கூறினர். ஒரு வாரமாக நீடிக்கும் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை குறித்து அதிமுக மூத்த முக்கிய நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், அமைச்சர் சி.வி.சண்முகம், அமைப்புச் செயலாளர் மனோஜ் பாண்டியன் ஆகியோர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ எந்த கருத்தும் கூறாமல் தொடர்ந்து மவுனம் சாதிக்கும் நிலையில் இந்தப் பிரச்னை கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் தமது கருத்து ஒன்றையும் பதிவிட்டிருந்தார்.
அதில், தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே! தொடர்ந்து 3-ஆவது முறையாக 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அ.இ.அ.தி.மு.கவின் இலக்கு. அதுவே மாண்புமிகு அம்மா அவர்களின் கனவு. அதனை நனவாக்க கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள் என ஓ.பி.எஸ். கூறிருந்தார்.
ஆனால், முதல்வர் வேட்பாளர் பற்றி ஓ.பி.எஸ் எதுவும் குறிப்பிடாதது இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளியா? அல்லது தொடருமா? என்ற சந்தேகத்தையே எழுப்பியிருந்தது. ஏனெனில் கட்சி சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் என்ற ரீதியில் இதுவரை ஓபிஎஸ்சும் இபிஎஸ்சும் கூட்டாகவே அறிக்கை வெளியிட்டு வந்தனர்.
ஆனால் இந்த முறை ஓபிஎஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்ததுதான் சந்தேகத்துக்கு காரணம். இந்நிலையில் தான் அடுத்த முதல்வர், நிரந்தர முதல்வர் ஓ.பி.எஸ்.தான் என்றெல்லாம் வாசகங்களுடன் தேனி மாவட்டத்தில் இன்று ஒட்டப்பட்ட போஸ்டரால் அதிமுகவில் மீண்டும் தர்மயுத்தம் நடக்குமோ? என்ற கலக்கம் அக்கட்சியினரிடம் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் இன்று சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடி ஏற்றி வைத்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர். விழா முடிந்த அடுத்த நிமிடமே தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் அறையில் திடீரென அவசரமாக 10-க்கும் மேற்பட்ட மூத்த அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
முதல்வர் வேட்பாளர் சர்ச்சை குறித்தும், வரும் தேர்தலில் கட்சியை ஒற்றுமையுடன் கொண்டு செல்வது குறித்தும் மூத்த அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, வீரமணி சி.வி.சண்முகம், காமராஜ், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
இதன் பின் கிரீன்வேஸ் சாலையில் உள்ள துணை முதல்வர் ஓ.பி.எஸ். வீட்டிற்கு இந்த அமைச்சர்கள் குழு விரைந்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஓ.பி.எஸ்.உடனான சந்திப்பு நீடித்தது. இந்த சந்திப்புக்குப் பின்னர் அதே அமைச்சர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் அவரது வீட்டில் சந்தித்து நீண்ட ஆலோசனை நடத்தினர். பின்னர் மீண்டும் ஓபிஎஸ் வீட்டிற்கு சென்று விட்டு பிறகு இபிஎஸ் வீட்டுக்கு வந்து ஆலோசித்தனர்.
அமைச்சர்களின் இந்த அடுத்தடுத்த சந்திப்பு ஓபிஎஸ்., இபிஎஸ் இடையிலான கருத்து வேறுபாட்டை களைய மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சி என்றே கூறப்பட்டாலும், வெளிப்படையாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஒரு வேளை ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து அறிக்கை வெளியிடவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டாலும், முதல்வர் வேட்பாளர் சர்ச்சை அதிமுகவில் பெரும் கலகத்தை ஏற்படுத்துமோ? என்ற கலக்கத்திலும் அதிர்ச்சியிலும் அக்கட்சியினர் உறைந்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.






