தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 17-ந் தேதி தொடக்கம்..! அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு!!
தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி வரும் 17-ந் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்று அறிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் முதல் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா தாக்கம் முடிவுக்கு வராததால், அடுத்த கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறப்பு எப்போது என்பதும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

ஆனால், தனியார் பள்ளிகள் பலவும் கல்விக் கட்டணத்தை குறி வைத்து ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதை தொடங்கி விட்டன. இந்நிலையில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று வெளியிட்டுள்ளார்.
அதன்படி, 1 முதல் 10-ம் வகுப்புகள் வரை மாணவர்கள் சேர்க்கை இம்மாதம் 17-ம் தேதி தொடங்கப்படும்.11-ம் வகுப்புக்கு மாணவர்கள் சேர்க்கை இம்மாதம் 24 ஆம் தேதி தொடங்கும் எனவும் தனியார் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி போன்ற வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இணையதளம் வழியாக நடைபெறும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே டிசம்பர் மாதம் வரை நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக செயலர் இன்று கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.







