6 வயது சிறுவனை கடத்திய கும்பல்…! 12 மணி நேரத்தில் சிறுவனை மீட்ட போலீஸ்..!
உத்திரப்பிரதேச மாநிலம் கோண்டாவில் ஆறு வயது குழந்தையை கடத்தி சென்று நான்கு கோடி ரூபாய் பிணைத்தொகை கேட்ட கும்பலை போலீசார் கைது செய்து 12 மணி நேரத்தில் குழந்தையை மீட்டனர். வியாபாரியின் வீட்டில் இருந்த 6 வயது சிறுவனை மர்ம நபர்கள் சிலர் கடத்திச் சென்றனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் கடத்தல் கும்பலை தேடி வந்தனர்.
இந்நிலையில் கடத்தல் கும்பல் காரர்கள் 4 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து அதிரடி நடவடிக்கையில் இறங்கிய காவல்துறையினர் குழந்தையை மறைவிடத்தில் இருந்து மீட்டனர். அப்போது நடந்த என்கவுன்டரில் 2 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.







