ஓட்டு அரசியல் பிழைப்புக்கு திட்டமிடுவதா? எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு விவகாரத்தில் பாஜகவை மறைமுகமாக சாடிய முதல்வர் எடப்பாடி!!
புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்து அவ மரியாதை செய்ததற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் இந்தச் செயலில் ஈடுபட்ட விஷமிகளை விரைந்து கண்டுபிடித்து சட்டத்தின் முன் தோலுரித்துக் காட்ட வேண்டும் எனவும், உரிய நடவடிக்கை எடுக்குமாறும் புதுச்சேரி முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன்ஓட்டு அரசியல் பிழைப்புக்காக திட்டமிடுவதாக பாஜகவை மறைமுகமாக சாடியுள்ளதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் கோவையில் பெரியார் சிலைக்கு காவிச் சாயம் பூசிய விவகாரம் பெரும் சர்ச்சையானது. இந்த சர்ச்சை ஓய்வதற்குள், புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மர்ம நபர்கள் காவித் துண்டு அணிவித்து அவமரியாதை செய்த விவகாரம் அதிமுகவினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதற்கு அதிமுக தரப்பில் கடும் கண்டனங்ககளும் எழுந்துள்ளன.
எம்ஜிஆர் சிலைக்கு காவித் துண்டு அணிவிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு மர்ம நபர்கள் காவித்துண்டு அணிவித்து, களங்கப்படுத்திய கொடுஞ்செயல் அண்டை மாநிலமான புதுச்சேரியில் நிகழ்ந்திருப்பது மிகுந்த மன வேதனையையும், வருத்தத்தையும் தருகிறது. மேலும், இந்த காட்டுமிராண்டித்தனம் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
சமீபகாலத்தில்இதுபோன்ற, சமூகத்திற்கு தொண்டாற்றிய தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவது, களங்கப்படுத்துவது போன்ற இழிசெயல்கள் மிகுந்த வருத்தத்தை தருகிறது.
உயரிய கொள்கை என்பது நமது லட்சியங்களை பிறர் ஏற்க பாடுபடுவது மட்டுமல்ல, மாற்று கருத்துக்களையும், குறிப்பாக மக்களின் நம்பிக்கைகளையும் மதிப்பதும் ஆகும். கருத்து சுதந்திரமென்ற பெயரில் தரமற்ற விமர்சனங்களால் பிறர் மனங்களை காயப்படுத்துவது, மனித நாகரீகத்திற்கு மாறான செயலாகும்.
மொழியால், இனத்தால், மதத்தால், சாதியால் வேறுபட்டு இருந்தாலும், இந்தியர் என்கிற ஒற்றைச் சொல்லில் பெருமிதம் கொண்டெழுகிற நமது ஒருமைப்பாட்டுக்கும், ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கவும், அதன் மூலம் ஓட்டு அரசியல் பிழைப்பிற்கும் சிலர் திட்டமிடுவதை ஒரு போதும் தமிழினம் ஏற்காது.
ஆன்மீக செம்மல் அரவிந்தரும், உணர்ச்சிக் கவிஞர் பாவேந்தரும் உதித்த புதுச்சேரி மண்ணில், புரட்சித் தலைவரின் திருவுருவச் சிலைக்கு அவமரியாதையை ஏற்படுத்தியிருக்கும் விஷமிகளை விரைந்து கண்டுபிடித்து, அவர்களை பின்னால் இருந்து இயக்கும் சமூக விரோதிகளையும் இனம் கண்டு, சமூகத்தின் முன்னும், சட்டத்தின் முன்னும் அவர்களை தோலுரித்து காட்டிட, கடுமையான விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள புதுச்சேரி முதல்வரை கேட்டுக்கொள்கிறேன் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதில் ஓட்டு அரசியல் பிழைப்பிற்கு சிலர் திட்டமிடுவதாக பாஜகவை குறிவைத்து மறைமுகமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளதாகவே கூறப்படுவதால் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே மோதல் ஆரம்பித்துள்ளதாக பரபரப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.






