கோவையில் பெரியார் சிலைக்கு “காவி” பூசிய விவகாரம்… பொங்கியெழுந்த மு.க.ஸ்டாலின், வைகோ!!
கோவையில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி அவமானப்படுத்திய சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
“இந்நிலையில் தமிழ் கடவுள் முருகன் புகழ் பாடும் கந்த சஷ்டி பாடலை அவதூறு பரப்பிய கூட்டத்தினருக்கு மு.க.ஸ்டாலின், வைகோ போன்றோர் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? பாஜகவினர் கேள்வி எழுப்பியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.”
கந்த சஷ்டி பாடல் குறித்தும் இந்து கடவுள்கள் குறித்தும் கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் யூ ட்யூப்பில் தொடர்ந்து அவதூறு மற்றும் கேவலமாக சித்தரித்ததாக பாஜகவினரும், இந்து அமைப்பினரும் பொங்கி எழுந்துள்ளனர். பாஜகவினர் தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடத்தினர். மேலும் இந்த விவகாரத்தில் | தமிழ்க் கடவுள் முருகனை அவமதிக்கும் கறுப்பர் கூட்டம் போன்றோரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி போன்றோர் கண்டிக்காதது ஏன் என பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா பகிரங்கமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு கோவையில் மர்ம நபர்களால் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி அவமானப்படுத்திய சம்பவம் தமிழகத்தில் மேலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு முதல் ஆளாக மு.க.ஸ்டாலின், வைகோ போன்றோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின் தமது டுவிட்டர் பதிவில், என் மீது செருப்பு வீசப்பட்ட இடத்தில் தான் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது என்றவர் பெரியார்…தன் படத்தை எரிக்க நினைத்தவருக்கு அச்சிட்டு கொடுத்தவர் பெரியார்…எதிர்க் கேள்விகளை எழுதியவருக்கு தன் பேனாவை கொடுத்தார்…அதனால் தான் அவர் பெரியார் …சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார்…என மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
இதேபோல் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது கண்டன அறிக்கையில் பொங்கியெழுந்துள்ளர். கோவை சுந்தராபுரம் பகுதியில், திராவிடர் கழகம் நிறுவிய தந்தை பெரியார் சிலை மீது காவி சாயத்தைப் பூசி சில சமூக விரோத சக்திகள் இழிவு செய்துள்ளன என்கிற செய்தி கேட்டு துடிதுடித்துப்போனேன்.
நேற்று நள்ளிரவில், திருட்டுத்தனமாக சதிகாரர்கள் கொடும் செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த அநியாயச் செயலை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

அண்மைக் காலமாக அ.தி.மு.க. ஆட்சியில் தந்தை பெரியார் அவர்களின் உருவச் சிலைகள் தகர்க்கப்படுவதும், தாக்கப்படுவதும், சிதைக்கப்படுவதும், இழிவு செய்யப்படுவதும் தொடர் நிகழ்வாகவே நடந்து வருகிறது.
தமிழக அரசு இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கேவலமான இந்தச் செயலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்துக் கைது செய்து, நீதிமன்றத்தின் முன்நிறுத்தி, கடுமையான தண்டனையைப் பெற்றுத்தரவேண்டும் என்றும் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜகவினர் கோபம்
தமிழ் கடவுள் முருகனை அவமதித்தது பற்றிய சம்பவம் குறித்து ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடவில்லை என மு.க.ஸ்டாலின், வைகோ போன்றோர் மீது பாஜகவினர் கோபமாக கேள்வி எழுப்பி வரும் நிலையில், தற்போது பெரியார் சிலை அவமதிப்பு விவகாரத்தில் இருவரும் பொங்கியெழுந்துள்ளது பாஜகவினரை மேலும் சீண்டுவதாகவே உள்ளதாக தெரிகிறது.






