இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு ஒரு மில்லியனை தாண்டியது… உயிரிழப்பும் கால் லட்சத்தை கடந்தது
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 35,468 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது.நேற்றும் புதிய உச்சமாக 680 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கையும் கால் லட்சத்தை தாண்டி 25,609 ஆக உயர்ந்துள்ளது.
முதல் தடவையாக 30 ஆயிரத்தை கடந்து நேற்று 32,695 பேருக்கு தொற்று என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதுவரையிலான மொத்த எண்ணிக்கையும் 10 லட்சத்தை எட்டவுள்ளது.
உலக அளவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.உலக நாடுகளில் இதுவரை ஒரு கோடியே 39 லட்சத்து 52 ஆயிரத்து 406 பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மொத்த உயிரிழப்பும் 5 லட்சத்து 92 ஆயிரத்து 757 ஆக உயர்ந்துள்ளது. மொத்த தொற்று பாதிப்பிலும் உயிரிழப்பிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் வட அமெரிக்க நாடுகளில் பெரிய நாடான பிரேசில் உள்ளது.
பாதிப்பு பட்டியலில் இந்த இரு நாடுகளைப் பொறுத்தவரை மில்லியன்(10 லட்சம்) கணக்கில் எண்ணிக்கை விர்ரென உயர்ந்துள்ளது. இதில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு சுமார் 3.7 மில்லியனை (37 லட்சம்) எட்டியுள்ளது. அங்கு உயிரிழப்பும் 1,41, 118 ஆக உயர்ந்து அதிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. பிரேசிலில் தொற்று பாதிப்பு 2 மில்லியனை (20 லட்சம்) கடந்து, உயிரிழப்பு 76,822 ஆக உயர்ந்து 2-வது இடத்தில் உள்ளது.
அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக மொத்த கொரோனா தொற்று பாதிப்பில் 3-வது இடத்தில் உள்ள இந்தியா,இப்போது, கொரோனா பாதிப்பிலும் இந்த மில்லியன் பட்டியலில் சேர்ந்துள்ளது. ஆனால் உயிர் இழப்பில் மற்ற நாடுகளைப் போல் மோசமான பாதிப்பு இந்தியாவில் இல்லை என்றே கூறலாம்.
கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இந்தியாவில் தொற்று பரவல் படு வேகமெடுத்து வருகிறது. நேற்று முன் தினம் முதல் தடவையாக ஒரே நாள் பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்து 32,695 ஆக பதிவாகி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,68,876 ஆக இருந்தது. இந்நிலையில் நேற்று அதையும் தாண்டி 3 5,468 ஆக புதிய உச்சத்தை எட்டியது. இதன் மூலம் மொத்த பாதிப்பு முதல் தடவையாக ஒரு மில்லியனை தாண்டி 10 லட்சத்து ஐந்தாயிரத்து 637 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று முன் தினம் உயிரிழப்பு 606 ஆக பதிவாகியிருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு மேலும் அதிகரித்து 680 ஆக பதிவாகியுள்ளது. இதனால் மொத்த பலி எண்ணிக்கை கால் லட்சத்தை கடந்து 25,609 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு, கடந்த 17 நாட்களில் மட்டும் 4 லட்சம் உயர்ந்துள்ள நிலையில், பாதிப்பில் இருந்து மீள்வோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மொத்த பாதிப்பில் கிட்டத்தட்ட மூன்றில் 2 பங்கு பேர் குணமடைந்துள்ளனர். அதாவது 6 லட்சத்து 35 ஆயிரத்து 757 பேர் குணமடைந்துள்ளனர். அதே போல் பிற நாடுகளைப் போல் அல்லாமல் இந்தியாவில் இறப்பு விகிதமும் மிகக் குறைவாகவே இருந்து வருகிறது.
இந்தியாவில் இறப்பு விகிதம் 2.5 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தாலி, ஸ்பெயின் பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளில் உயிரிழப்பு வீதம் 10% மேல் இருந்தது. அந்நாடுகளில் இப்போது தொற்று பரவல் சொற்பமாகிவிட்டது.இந் நிலையில், தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்பை தற்போதும் அதிக அளவில் சந்தித்து, பட்டியலில் முதலிரண்டு இடத்தில் உள்ள அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் உயிரிழப்பு சுமார் 4% என்பதும் குறிப்பிடத்தக்கது.






