சாத்தான்குளம் இரட்டைக் கொலை : இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேருக்கு 3 நாள் சிபிஐ காவல்… மதுரை நீதிமன்றம் அனுமதி
சாத்தான்குளத்தில் தந்தை மகன் இருவரையும் சித்ரவதை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 காவல்துறையினரை வரும் 16-ந்தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு மதுரை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சாத்தான்குளத்தில் தந்தை மகனான ஜெயராஜ் – பென்னிக்ஸ் இருவரையும் சித்ரவதை செய்து கொல்லப்பட்டது தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது. இருவரின் உயிரிழப்பு தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்த சிபிசிஐடிக்கு உத்தரவிட்டது.
இதனால் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள் ராஜ கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் ஏட்டுகள் முருகன், முத்துராஜ் ஆகிய 5 பேர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து சிறப்பு எஸ்.ஐ. பால்துரை உள்ளிட்ட மேலும் 5 காவலர்களும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

தற்போது இந்த வழக்கு விசாரணையை சிபிஐ மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் முதற்கட்டமாக கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் ராஜ கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேரையும் தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்து மதுரை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த 5 பேரையும் 5 நாட்கள் சிபிஐ விசாரணைக்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு மீதான விசாரணை இன்று மதுரை மாவட்ட முதன்மை செஷன் நீதிபதி ஹேமானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரும் நீதிபதிகள் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சிபிஐ காவலுக்கு அனுமதிப்பது தொடர்பாக 5 பேரின் விருப்பத்தையும் நீதிபதி தனித்தனியாக கேட்டதற்கு மறுப்பு தெரிவித்தனர். ஆனால் சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞரோ, இந்த வழக்கில் 5 பேரையும் காவலில் எடுப்பது அவசியமானது என்று வாதிட்டார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 போலீசாரையும் ஜூலை 16-ந் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். ஜுலை 16-ந் தேதி மாலை 5.30 மணிக்குள் 5 பேரையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 5 பேரையும் சிபிஐ அதிகாரிகள் தங்கள் கஸ்டடியில் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.







