--- --:--:-- --

கோவை ராக்கிபாளையத்தில் உள்ள பிரபல தங்க நகை தயாரிப்பு நிறுவனமான எமரால்டு ஜீவல் இண்டஸ்ட்ரியில் ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று. நிறுவனம் தற்காலிகமாக மூடல் !!!

20

கோவை மாவட்டம் துடியலூரை அடுத்துள்ள ராக்கிபாளையத்தில் பிரபலமான தங்க நகை தயாரிப்பு நிறுவனமான எமரால்டு ஜீவல் இண்டஸ்ட்ரி செயல்பட்டு வருகிறது.இங்கு தங்க நகைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெறுகின்றன.நாடு முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டுவரும் இந்நிறுவனத்தில் உள்ளூர்,வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

 

இதில் அண்டை மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் நிறுவனத்தின் உள்ளே உள்ள தங்கும் விடுதியில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.இந்நிலையில் ராக்கிபாளையம் கம்பெனி வளாகத்தில் உள்ளே இருக்கும் தங்கும் விடுதியில் தங்கி வேலை செய்து வரும் ஆண் ஊழியர் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.தொடர்ந்து விடுதியில் அவருடன் தங்கியிருந்த 9 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் மேலும் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைஅடுத்து அவர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து எமரால்டு நிறுவனம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு ராக்கிபாளையம் எமரால்டு நிறுவனமும் அருகில் இருந்த அதன் கிளை நிறுவனமும் தற்காலிகமாக மூடப்பட்டு ஊழியர்களுக்கு 7 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அதேபோல் விடுதியில் உள்ள அனைத்து ஊழியர்களையும் தனிமைப்படுத்தி இருக்கும்படி மருத்துவத்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.மேலும்,இன்று மருத்துவத்துறை சார்பாக அதிகாரிகள் குழு நிறுவனத்திலும் ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

இதையடுத்து குருடம்பாளையம் ஊராட்சி சார்பாக உள்ளே யாரும் செல்லாத வகையில் நிறுவன வாயில்களில் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டது.ஆயிரக்கணக்கானோர்பணியாற்றும் பிரபல தங்க நகை தயாரிப்பு நிறுவனமான எமரால்டு ஜிவல் இண்டஸ்ட்ரியில் வேலை செய்த ஊழியர்கள் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் மற்ற ஊழியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon