கிணற்றுக்குள் விழுந்த இளைஞரை காப்பாற்ற தன் உயிரை விட்ட தீயணைப்பு வீரர்..!
பெரம்பலூர் அருகே கிணற்றுக்குள் மயங்கி கிடந்த இளைஞரை மீட்க தன்னுயிரை தியாகம் செய்த தீயணைப்பு வீரர்களின் தியாக செயல் அனைவர் மனதையும் கலங்க வைத்துள்ளது. பெரம்பலூர் அருகே செல்லியம்பாளையம் விவசாய கிணற்றுக்குள் ராதாகிருஷ்ணன், பாஸ்கர் ஆகிய 2 பேரும் மயங்கி கிடப்பதாக பெரம்பலூர் நகர தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது.
உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு மீட்புக் குழுவினர் இருவரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது ராஜ்குமார் என்ற தீயணைப்பு வீரர் கிணற்றுக்குள் இறங்கினார். ஆனால் கிணற்றை சீரமைக்க வெடிவைத்து விஷவாயு ஏற்பட்டதை அவரும் மற்றவர்களும் அறியவில்லை.
கிணற்றுக்குள் விழுந்தவர்களில் ராதாகிருஷ்ணன் இறந்துவிட்ட நிலையில் பாஸ்கர் மட்டும் உயிருடன் இருப்பதை அறிந்து அவரை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர் ராஜ்குமார் ஈடுபட்டார். ஆனால் விஷவாயு ராஜ்குமாரை தாக்கிய நிலையில் தனது உயிரைப் பொருட்படுத்தாமல் தான் கட்டியிருந்த கயிற்றை கொண்டு பாஸ்கரைப் பிணைத்து அவரை மேலே அனுப்பியிருக்கிறார்.
அதற்குள் மயங்கி விழுந்த ராஜ்குமாரை மீட்க மேலும் இரண்டு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி அவர் மயக்கமடைந்ததையடுத்து தீயணைப்பு வீரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மூன்று பேரையும் மீட்டனர். ஆனால் ஆம்புலன்சில் செல்லும் வழியில் தீயணைப்பு வீரர் ராஜ்குமார் உயிரிழந்தார்.
துணிச்சலான மீட்பு பணியில் ஈடுபட்ட ராஜ்குமாரின் எதிர்பாராத இழப்பால் ஆறு வயது மகள் 3 வயது மகனுடன் கலங்கி நிற்கிறாள் அவரது மனைவி. யாரென்றே தெரியாதவர்களை காப்பாற்ற தனது உயிரை இழந்த தீயணைப்பு வீரர் ராஜ்குமாரின் தியாகம் அனைவரையும் கலங்க வைத்துள்ளது.







