--- --:--:-- --

சாத்தான்குளம் இரட்டைக் கொலை : கைதான இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோரை காவலில் எடுக்க சிபிஐ மனு

14

சாத்தான்குளத்தில் தந்தை மகன் இருவரையும் சித்ரவதை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தாப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

சாத்தான்குளத்தில் தந்தை மகனான ஜெயராஜ் – பென்னிக்ஸ் இருவரையும் சித்ரவதை செய்து கொல்லப்பட்டது தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன் வந்து விசாரித்தது. இருவரின் உயிரிழப்பு தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்த சிபிசிஐடிக்கு உத்தரவிட்டது. இதனால் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள் ராஜ கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகிய 5 பேர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் எஸ்.ஐ. பால்துரை உள்ளிட்ட 5 காவலர்களும் கைது செய்யப்பட்டனர்.

 

இந்நிலையில், தமிழக அரசின் பரிந்துரையின் பேரில், இந்த விசாரணையை சிபிஐ மேற்கொண்டுள்ளது. டெல்லியில் இருந்து வந்த சிபிஐ கூடுதல் எஸ்.பி.சுக்லா தலைமையிலான 8 அதிகாரிகள் கொண்ட குழு இந்த விசாரணையை அடுத்த கட்டமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் முதற்கட்டமாக கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் ராஜ கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேரையும் தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

 

அதன்படி 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, மதுரை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் இன்று மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் எனத் தெரிகிறது.

Leave a Reply

Right Menu Icon