தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக சாரல் மழை..!
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில், கிண்டி, வடபழனி, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த சாரல் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. சென்னையின் புறநகரில் பலத்த காற்றுடன் கன மழை கொட்டி தீர்த்தது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம், மேல்மருவத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கனமழை நீடிக்கிறது. கல்பாக்கம், மாமல்லபுரம், திருப்போரூர் சுற்றுவட்டாரத்தில் இடி மின்னலுடன் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் காலையிலிருந்து சாரல் மழை பெய்து வருகிறது.
சேலத்தில் வாழப்பாடி, முத்தம்பட்டி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.







