காவலர்களுக்கு கொரோனா எதிரொலி.கோவை துடியலூர் காவல் நிலையம் மூடல்.மேலும் 2 காவலர்களுக்கு இன்றும் கொரோனா தொற்று !!!
கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஒரு காவலருக்கு காய்ச்சல் இருந்ததை அடுத்து கடந்த 4 நாட்களுக்கு முன் 30 காவலர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த ஒரு பெண் காவலர் உள்ளிட்ட 5 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது, தொற்று உறுதி செய்யப்பட்ட 5 காவலர்களும் கோவை ESI மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டதுடன் காவல் நிலையமும் மூடப்பட்டது. மேலும், அதே வளாகத்தில் செயல்பட்டு வந்த துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையமும் மூடப்பட்டது.

இதையடுத்து தற்போது துடியலூரை அடுத்துள்ள தொப்பம்பட்டி பிரிவு பகுதியில் உள்ள வேணுகானம் திருமண மண்டபத்தில் துடியலூர் காவல் நிலையம் மற்றும் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையமும் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அங்கு பணிபுரியும் காவலர்கள் 10 பேருக்கு கடந்த 2 நாட்களுக்கும் செய்யப்பட்ட பரிசோதனையில் இன்று மேலும் 2 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. ஒரே காவல் நிலையத்தில் பணிபுரியும் 7 காவலர்களுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது அங்கு பணியாற்றி வரும் காவலர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.







