--- --:--:-- --

குழந்தைக்கு மருந்து வாங்க சென்றவரின் வாகனத்தை பறிமுதல் செய்ததால்…இளைஞர் தீக்குளிப்பு..!

1.1

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் காவல்துறையினர் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததை கண்டித்து தீக்குளித்த இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆம்பூர் அண்ணாநகரை சேர்ந்த முகிலன் என்பவர் குழந்தைக்கு மருந்து வாங்க நேற்று மருந்தகம் சென்றுள்ளார்.

 

ஆனால் முழு முடக்கம் என்பதால் இதனை போக்குவரத்து காவலர்கள் தடுத்து நிறுத்தி அவரது இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். அப்போது மருந்து வாங்கிச் செல்வதாக அவர் கூறிய போதும் காவல்துறையினர் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.

 

இதனால் விரக்தி அடைந்த முகிலன் வீட்டிற்கு சென்று மண்ணெண்ணெய் எடுத்து வந்து தனது உடலில் ஊற்றிக்கொண்டு காவலர்கள் முன்னிலையில் தீ வைத்துக் கொண்டார். தீக்காயங்களுடன் தேசிய நெடுஞ்சாலையில் விழுந்த முகிலனை அந்த வழியே சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

அங்கு சென்ற வேலூர் சரக டிஐஜி காமினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்து உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் 91% தீக்காயம் முகிலனுக்கு ஏற்பட்டிருப்பதால் அங்கிருந்து வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

 

காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதோடு அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் காவல் நிலையத்தில் வைத்து காவலர்கள் ஊர்க்காவல் படை வீரர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் ஊர்காவல் படையினர் என ஐந்து பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 

முகிலன் தற்கொலை முயற்சிக்கு காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon