தென்காசி மாவட்டம் கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் , செங்கல்சூளைகளில் கொத்தடிமைகளாக தவிக்கும் வடமாநிலத்தவர்கள்: ஆதார் எண் இல்லாமல் வங்க தேசத்தினர் ஊடுருவலா?
தென்காசி மாவட்டம் கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 450க்கும் மேற்பட்ட செங்கல்சூளைகள் இயங்கி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை கட்டுமான தொழில் துவங்கி அடிப்படை கூலித்தொழில் வரை தனிநபர் வருமானம் என்பது குறைந்தபட்சம் ரூ.500 என்ற அளவில் இருக்கிறது. செங்கல்சூளைகளைப் பொறுத்தவரை பணியாட்கள் அதிகமாக தேவைப்படும் என்ற பட்சத்திலும், அதிகப்படியான கூலியை கொடுக்க வேண்டிய நிலை இருப்பதால் வடமாநிலத்தவரை பணியமர்த்தும் நிலை உள்ளது.
ஆரம்பத்தில் விருப்பத்தின் அடிப்படையில் பணிக்கு வந்த வடமாநில தொழிலாளர்களுக்கு செங்கல்சூளை உரிமையாளர்கள் முன்பணம் கொடுத்து குடும்பம் குடும்பமாக வரவழைத்து கொத்தடிமையாக்கும் முறை அதிகரித்து வருகிறது. இதனால் தங்களது மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரியும் இடத்தில் தங்களது உரிமைகளை இழந்து குறைந்த ஊதியத்தில் பணியாற்ற நிர்ப்பந்திக்கப்பட்டு வருகின்றனர். இதில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் கொத்தடிமைகளாக நடத்தப்படும் அவலம் நடக்கிறது.
தற்போது கொரோனா பேரிடரில் அவரவர் தங்களது மாநிலங்களுக்கு திரும்பும் சூழ்நிலையில் முன்பணம் பெற்றுக் கொண்டதால் கொத்தடிமைகளாக்கப்பட்ட தொழிலாளர்களை தங்களது சொந்த இருப்பிடங்களுக்கு செல்ல விடாமல் செங்கல்சூளை உரிமையாளர்கள் தடுத்து விட்டனர். இவ்வாறாக கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் சுமார் 1500க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் சிக்கித்தவித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

“மேலும் தொழிலாளர்கள் என்ற போர்வையில் வங்கதேச நபர்களின் ஊடுருவல் இருப்பதாகவும், ஆதார்கார்டு இல்லாததால் தற்போது இவர்கள் எந்த பகுதிக்கும் இடம்பெயர முடியாமல் தவித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.”
வழக்கமாக வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை, அவர்களது குடும்ப விவரங்கள், பள்ளி வயது குழந்தைகளின் விவரங்கள், அவர்களுக்கு அளிக்கப்படும் இருப்பிட மற்றும் சுகாதார வசதிகள் ஆகியவை குறித்த பதிவேடுகளை முறையாக பராமரிக்க வருவாய்த்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் செங்கல்சூளை அதிபர்களுக்கு சாதகமாக வருவாய்த்துறை அதிகாரிகள் செயல்படுவதால், வடமாநில தொழிலாளர்கள் குறித்த உண்மையான நிலவரங்களை அரசுக்கு தெரியாமல் மறைத்து விடுவதால் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன.
வடமாநில தொழிலாளர்கள் தங்களது ஊருக்கு திரும்ப விருப்பமில்லை என கூறிவிட்டதாகவும், தங்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுவதாகவும் மிரட்டலின் அடிப்படையில் சொல்ல வைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

ஏற்கனவே செங்கல்சூளைகளில் தமிழக அரசின் சின்னமான பனைகளை வெட்டி விறகாக பயன்படுத்துவதாகவும், செங்கல்சூளை உரிமையாளர்களின் கவனிப்பால் இதனை வருவாய்த்துறையினர் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதாகவும் புகார்கள் எழும்பியுள்ள நிலையில், தற்போது வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் புதிய குடைச்சலை கிளப்பியுள்ளது. வருவாய்த் துறையின் இந்த அலட்சிய நடவடிக்கை கடையம் காவல்நிலையத்துக்கும் புதிய சிக்கலை உருவாக்கி உள்ளது.
செங்கல்சூளைகளில் வடமாநிலத்தவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் சட்டசிக்கல்கள் உருவாகும் அபாயம் இருப்பதாகவும், ஏற்கனவே சாத்தான்குளம் சம்பவம் காவல்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தி உள்ள நிலையில் கொத்தடிமைகள், மற்றும் வங்கதேசத்தவர் ஊடுருவியுள்ளதாக கிளம்பியுள்ள தகவல்கள் கடையம் காவல்துறையினரை கண்விழி பிதுங்க வைத்துள்ளது.







