கொரோனா தடுப்பு பணி: சென்னை தலைமைச் செயலகம் 2 நாட்களுக்கு மூடல்… வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு!
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் தலைமைச் செயலகம் இன்றும், நாளையும் மூடப்பட்டது. வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் சுகாதார மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
உலகில் கொரோனா பீதிக்கு ஆளாகாதவர்கள் யாரும் இல்லை என்ற அளவுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தினமும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரையிலான பாதிப்பு எண்ணிக்கை 8,20,916 ஆகவும் உயிரிழப்பு 22,123 ஆகவும் உயர்ந்துள்ளது.
இந்தியாவில் மொத்த பாதிப்பில் மகாராஷ்டிரத்துக்கு அடுத்து தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.தமிழகத்தில் கொரோனா தொற்றால், முன் களத்தில் பணியாற்றும் டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவல் துறையினர் உள்ளிட்ட அரசுத் துறையினர் முதல் அரசியல்வாதிகளையும் விட்டு வைக்கவில்லை என்றே கூறலாம். இதனால் ஒருவருக்கு தொற்று பாதிப்பு என்ற தகவல் உறுதி செய்யப்பட்டவுடன் சம்பந்தப்பட்டவர் பணி புரியும் அலுவலகம் சில நாட்களுக்கு மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக பதிவாகியுள்ளது. இந்நிலையில் சென்னையில் முதல்வர் , அமைச்சர்கள் , அரசுத் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் தினசரி சென்று வரும் தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் பலர் கொரோனா தொற்றுக்கு ஆளாவது வாடிக்கையாகி வருகிறது.
அமைச்சர்களில் மட்டும் இதுவரை கே.பி.அன்பழகன், தங்கமணி, செல்லூர் ராஜு என 3 பேர் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் அவ்வப்போது மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. இரு நாட்களுக்கு முன் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று பாதிப்பில்லை என்ற ரிசல்ட் வெளியானது.
இந்நிலையில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக, சனி, ஞாயிறு விடுமுறை தினங்களான இன்றும், நாளையும் சென்னை தலைமைச் செயலகத்தை முழுவதுமாக மூட முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று வேறு பணிகளுக்காக அமைச்சர்கள் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் முதல் பணியாளர்கள் யாரும் அனுமதிக்கப்படாமல், தலைமைச் செயலக வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.







