--- --:--:-- --

தங்க கடத்தல் ஸ்வப்னா..! பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்!

9.1

கேரளாவில் தங்க கடத்தல் தொடர்பான விசாரணைக்கு சம்பந்தப்பட்ட மத்திய அமைப்புகளின் விசாரணை தேவை என்று பிரதமர் மோடிக்கு அந்த மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஐந்தாம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பார்சலில் வந்த சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இந்த கடத்தலில் பல்வேறு கோணங்கள் இருப்பதால் அனைத்து விதத்திலும் முழுமையான விசாரணை தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

 

இக்குற்ற சம்பவத்தில் தொடர்புடைய அனைத்தையும் வேர் அறுக்க வேண்டும் என்று கூறியுள்ள அவர் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகளும் விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு கேரள அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

 

கேரளாவில் தங்க கடத்தலில் தேடப்பட்டு வரும் ஸ்வப்னா யார்? கேரளா அரசை அதிர வைத்துள்ள தங்க கடத்தலில் முதல்வர் அலுவலகம் மீது குற்றம் சாட்டப்படும் நிலையில் இதன் முக்கிய புள்ளியாக தேடப்பட்டு வருபவர் ஸ்வப்னா சுரேஷ். 36 வயதாகும் இவர் அபுதாபியில் பிறந்தவர். திருவனந்தபுரத்தை பூர்வீகமாக கொண்டவர்.

 

2005 முதல் 2010 ஆம் ஆண்டு வரை குவைத் சவுதி விமான நிலையங்களில் பயணியர் சேவை பிரிவிலும், அபுதாபியில் உள்ள ஐக்கிய அரபு அமீரக இந்திய தூதரகத்திலும் பணியாற்றியவர். கருத்து வேறுபாட்டால் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று ஸ்வப்னாவுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். குழந்தைகளுடன் ஊர் திரும்பிய ஸ்வப்னா 2012 முதல் 2014 ஆம் ஆண்டு வரை திருவனந்தபுரத்தில் மனிதவள மேம்பாட்டு நிறுவனங்கள் பலவற்றில் பணியாற்றி வந்தார்.

 

பின்னர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் செயல் அலுவலர் பணியில் சேர்ந்த ஸ்வப்னா அதிகாரி ஒருவர் மீது பொய்யாக பாலியல் துன்புறுத்தல் புகார் தந்தது தெரியவந்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் திருவனந்தபுரம் ஐக்கிய அமீரக தூதரகத்தில் பணியில் சேர்ந்தார். அங்கு தான் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த சரத்குமாரிடம் பழக்கம் ஏற்பட்டது.

 

இவர்களின் திருமணத்தை மீறிய உறவில் பிரச்சனைகள் வெடிக்க இருவரும் தூதரக பணியிலிருந்து தாங்களாகவே விலகுகின்றனர். தொடர்ந்து கேரள அரசின் கேரள முதல்வரின் கட்டுப்பாட்டில் இயங்கும் தகவல் தொழில்நுட்பத் துறையில் இன்பிராக்ஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்தில் ஆறுமாத ஒப்பந்த அடிப்படையில் சேர்ந்த ஸ்வப்னா அதிகாரிகள் தொடர்பால் தன்னை பலப்படுத்திக் கொண்டதாக தெரிகிறது.

 

2019ஆம் ஆண்டு செப்டம்பரில் தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறந்த பணியாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்புத் துறையின் கேரள அரசு செயலாளர் சிவசங்கர் ஸ்வப்னாவின் வீட்டிற்கு வந்து செல்லும் அளவிற்கு பழகியுள்ளார். ஸ்வப்னாவுக்கு மாத சம்பளம் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் அதிகமாக வழங்கப்பட்டதாகசுங்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

ஏற்கனவே அபுதாபியில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் பணியாற்றியது, திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் பணியாற்றியது, வெளிநாடு மற்றும் இந்திய விமான நிலையங்களில் பணிபுரிந்தது ஆகிய முன் அனுபவம் மற்றும் அப்போதைய பழக்கங்களால் தங்க கடத்தல் எளிதாக செய்திருக்கிறார் என்கிறது சுங்கத்துறை.

 

அதற்காக போலி ஆவணங்கள் தயாரித்ததும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தற்போதைய பணியாளர்களை மகிழ்விக்க பல்வேறு நடவடிக்கைகளை ஸ்வப்னா எடுத்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon