தனிமைப்படுத்தப்பட்டவர் வெளியே சுற்றியதால் கை , கால்களை கட்டி ஆம்புலன்சில் ஏற்றி சென்ற சுகாதாரத்துறை ஊழியர்கள்..!
கொரோனா தனிமைப்படுத்துதல் விதிகளை மீறி சுற்றி வந்தவரை சுகாதாரத்துறையினர் விரட்டிப் பிடித்து கை கால்களை கட்டி ஆம்புலன்சில் ஏற்றி சென்ற சம்பவம் கேரள மாநிலம் பத்தனம் திட்டாவில் நடந்துள்ளது. திங்கள் கிழமை பத்தனம்திட்டா புனித பீட்டர் சந்திப்பு பகுதியில் ஒருவர் முக கவசம் அணியாமல் சுற்றி வருவதாக பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்த போது அந்த 43 வயதான நபர் குவைத்திலிருந்து நான்கு நாட்களுக்கு முன்புதான் வந்ததாகவும் 14 நாட்கள் தனிமை படுத்துதலில் இருக்க வேண்டிய அவர் வெளியே சுற்றுவது தெரிய வந்தது. இதனையடுத்து காவலர்கள் தெரிவித்த தகவலின்படி அங்கு வந்த சுகாதாரத்துறையினர் தப்பியோட முயன்ற அந்த நபரை பிடித்து கை கால்களை கட்டி ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்றனர்.
தற்போது அந்த நபர் எர்ணாகுளம் கோலஞ்சேர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் மீது பத்தனம்திட்டா காவலர்கள் அந்த நபர் மீது தனிமைப்படுத்துதல் விதிமீறல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.






