ஊரடங்கு அமலில் உள்ள மதுரை, தேனி மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு!
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள மதுரை மற்றும் தேனி மாவட்ட பகுதிகளில் மின் கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட மதுரை மாநகராட்சி, பறவை நகர் பஞ்சாயத்து, மதுரை கிழக்கில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்து மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய மதுரைமாவட்ட பகுதிகளிலும் தேனி மாவட்டத்தில் தேனி, கம்பம், சின்னமனூர், போடிநாயக்கனூர்மற்றும் கூடலூர் நகராட்சி பகுதிகளிலும் வருகிற 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் ஆகியுள்ளது.
இந்தப் பகுதிகளை சேர்ந்த தாழ்வழுத்த மின் நுகர்வோர்கள் மின் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி ஜூன் 24ஆம் தேதி முதல் ஜூலை 14-ஆம் தேதி வரை இருப்பின் அவர்கள் ஜூலை 15ஆம் தேதி வரை தாமத கட்டணம் இன்றி மின் கட்டணம் செலுத்தும் வகையில் காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







