ஆன்லைன் கும்பலிடம் பணத்தை இழந்த கட்டிட தொழிலாளி! மீட்டுத்தந்த போலீசார்!
மதுரையில் கட்டிட தொழிலாளிகள் வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்ட முப்பதாயிரம் ரூபாயை காவல் துறையினர் மீட்டு கொடுத்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி பரமசிவம் தனக்கு கிடைக்கும் அன்றாட ஊதியத்தில் குடும்ப செலவு போக மிஞ்சும் சொற்பத் தொகையை தனது வங்கி கணக்கில் சேமிப்பது பரமசிவத்தின் வழக்கம்.
குழந்தைகளுக்காக சிறுக சிறுக பரமசிவம் சேர்த்து வைத்த பணத்தில் செல்போன் வழியே திருடியது மோசடி கும்பல். அவரது கணக்கிலிருந்து 30 ஆயிரம் ரூபாய் மாயமானது என்ன செய்வதென தெரியாமல் தவித்த பரமசிவம் தான் பணியாற்றும் கட்டிட தொழிலாளர்களிடம் உதவி கேட்டுள்ளார். அவர்களது ஆலோசனையின் பேரில் காவல் துறையிடம் புகார் அளித்தார்.
பரமசிவம் அவரது வங்கி கணக்கில் இருந்து திருடிய பணத்தை பயன்படுத்தி மோசடி கும்பல் ஆன்லைனில் பொருள் வாங்கி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இழந்த பணம் திரும்பக் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் 22 நாட்கள் காத்திருந்தார் பரமசிவம். அவரது எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. பரமசிவம் பறி கொடுத்த பணத்தை காவல்துறை மீட்டுக் கொடுத்தது.
ஆன்லைன் நிறுவனத்தை தொடர்புகொண்டு பரமசிவத்தின் பணத்தை காவல்துறையினர் பெற்றுக் கொடுத்துள்ளனர். வேறு வழிகளில் பணம் திருடப்பட்ட இருந்தால் அதை மீட்பது கடினம் எனக் கூறப்படுகிறது. பரமசிவத்தை போல் பலர் தங்களுடைய பணத்தை மோசடி கும்பலிடம் தொலைத்து இருக்கிறார்கள் என்பதே கசப்பான உண்மை.







