--- --:--:-- --

மேட்டுப்பாளையம் அருகே மர்ம நபர்கள் சுருக்கு கம்பியை வைத்து சிறுத்தையை கொல்ல முயற்சி ?

2.1

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட அறிவொளி நகர் சென்னாமலை கரடு பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் பலமுறை தெரிவித்திருந்தனர்.இந்த நிலையில் மோத்தேபாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலையை சுற்றிலும் போடப்பட்டுள்ள முள்கம்பி வேலியில் சிக்கி சிறுத்தை ஒன்று போராடிக்கொண்டிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிய வந்துள்ளது.

 

சம்பவம் குறித்து அறிந்த சிறுமுகை வனச்சரகர் செந்தில்குமார்,மேட்டுப்பாளையம் வனச்சரகர் செல்வராஜ் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்று கம்பி வேலியில் சிக்கியுள்ள சிறுத்தையை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.படுகாயங்களுடன் ஆக்ரோஷமாக காணப்படும் சிறுத்தை அருகே எவரும் செல்ல இயலவில்லை.இதனால் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை மீட்க வனத்துறையினர் முடிவு செய்து மருத்துவர் சுகுமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

 

பல மணி நேரத்திற்கு பின்னர் தாமதமாக வந்த வனத்துறை மருத்துவர் சுகுமார் தலைமையிலான மருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்தி பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் காயமடைந்த சிறுத்தையை மீட்டனர்.உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுத்தைக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்போது,செய்தியாளர்களுக்கும் செய்தியை பதிவு செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.மக்களின் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் சிறுத்தையை கொல்ல மர்ம நபர்கள் வைத்த சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை பலத்த காயமடைந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.சிகிச்சைக்கு பின்னரே சிறுத்தை வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்படும் என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதன் பேரில் கூண்டு வைக்கப்பட்டு சிறுத்தை ஒன்று பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.மர்ம நபர்கள் வைத்த சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை படுகாயமடைந்த சம்பவம் வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon