ஊரடங்கு காலத்தை வீணடிக்காமல் வீடு வீடாக சென்று பாடம் கற்பிக்கும் ஆசிரியர்!
பொது முடக்க நாட்களை மாணவர்களுக்கு பயனுள்ளதாக மாற்றும் வகையில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் மேற்கொள்ளும் முயற்சி பாராட்டுக்குரியது. ஆசிரியர்களின் பணி வகுப்பறையோடு முடிவதில்லை.
அங்கிருந்து தொடங்கி மாணவர்களின் வாழ்க்கையை சரியான பாதையில் திசை திருப்பும் வரை நீள்கிறது என்பதை தனது செயலால் எடுத்து வைத்துள்ளார். புதுக்கோட்டையை சேர்ந்த தமிழரசன் கடந்த 12 ஆண்டுகளாக தஞ்சை மாவட்டம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வரும் இவர் தற்போது மேற்கொண்டு வரும் செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது.
பொது முடக்கத்தால் வீட்டில் முடங்கி கிடக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்துவது இயலாது என அறிந்த தமிழரசன் மாணவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று பாடம் கற்பிக்கிறார். அம்மையாண்டி, வீரராகவபுரம், பஞ்சநதி புரம் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் ஆசிரியர் தமிழரசன் ஐந்து முதல் பத்து மாணவர்களை ஒரே இடத்தில் அமர வைத்து பாடங்களை நடத்தி வருகிறார்.
விடுமுறை கிடைத்துவிட்டது என நினைத்து பொழுதை கழிக்காமல் தமிழரசனுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கின்றனர் அவரின் மாணவர்கள். ஆசிரியர் வீடு தேடி வந்து பாடம் நடத்துவது பயனுள்ளதாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.






