--- --:--:-- --

பனை கடத்தியதால் வந்த வினை! மாவட்ட நிர்வாகத்தின் மின்னல் வேகம்… கனிமவளம் கடத்தியவர்களுக்கு சோகம்!!

5ba27e69-bf8d-470c-b033-a7ade8ceb1c4

தண்ணீர் ஊற்றாமலேயே பழம் தருவது, பனை மரம். செலவுமின்றி வளர்ந்து நிற்கும் பனைமரங்கள், குறைந்தது 60 வருடங்களுக்கு மேல் வாழ்பவ. வேர் முதல், நுனி வரை பனையின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு பயன் தருபவை. இதனால் தான், கேட்டதைக் கொடுக்கும் கற்பகத்தருவோடு, ‘பூலோகத்து கற்பகத்தரு’ என்று பனை மரத்தை புகழ்கின்றனர்.

 

ஒரு புள்ளிவிவரத்தின்படி, 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 30 கோடி பனை மரங்கள் இருந்தனவாம்; தற்போது 5 கோடிக்கும் குறைவாகவே உள்ளன. பனை மரங்கள் நிலத்தடி நீரை செறிவூட்டும் திறன் கொண்டதால் தான், நம் முன்னோர்கள் நீர்பிடிப்பு பகுதிகளில் அவற்றை ஏற்படுத்தினர்.

 

பனையின் அருமை பெருமைகளை மறந்து, காசு பார்க்கும் ஆசையில் சிலர் அவற்றை வெட்டி வீழ்த்தி வரும் சோகச் சம்பவங்கள் தொடர்கின்றன. இதற்கு உதாரணமான சம்பவங்கள், சிவகங்கை மாவட்டத்தில் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.

 

சிவகங்கை வட்டத்திற்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலைப்பகுதியில் நெடுநெடுவென்று பனைமரங்கள் வளர்ந்து காணப்படுகின்றன. ஆனால், சில கயவர்களின் கண்ணில் பட்டும் அவை வெட்டப்பட்டு வருகின்றன. அண்மையில் இதுபோல் பனைமரங்களை வெட்டி லாரியில் சிலர் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

 

இதுபற்றிய தகவல், மாவட்ட நிர்வாகத்திற்கு சென்றது. உடனடியாக செயல்பட்ட்ட சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் மற்றும் சிவகங்கை வட்டாட்சியர்கள், சம்பவப்பகுதிக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். வெட்டப்பட்ட பனைமரம் லாரியில் ஏற்றிச்செல்லத் தயார்நிலையில் இருந்த போது, அதை மடக்கினர்.

பனை மரத்தை வெட்டி கடத்திய குற்றத்திற்காக, ரூ.12,600 அபராதத்தை விதித்த வருவாய் கோட்டாட்சியர், பனைமரம் வெட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட்டார். கடத்தலுக்கு பயன்படுத்தி வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

 

இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மின்னல் வேக செயல்பாட்டை, சமூக ஆர்வலர்கள், பசுமை விரும்பிகள் பாராட்டியுள்ளனர். அதே நேரம், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட நிர்வாகமும் இன்னமும் விழிப்புடன் இருக்க வேண்டுமென்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

பசுமை அரண்களை பாதுகாத்திட வேண்டும்; இதுபோல் கனிம வளங்களை அரசு அனுமதித்த அளவுகளை விட அதிகமாக எடுக்கப்படும் இடங்களை மாவட்ட ஆட்சியர் நேரடியாக பார்வையிட வேண்டும். விதிகளை மீறுவோர், அது யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவே, வருங்காலத்தில் இயற்கை வளங்களை சுரண்டும் பேர்வழிகளுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்று, அவர்கள் கூறுகின்றனர்.

 

மக்களின் வாழ்வாதாரம் விவசாயத்தை நம்பியுள்ளது. விவசாயமோ மழையை சார்ந்திருக்கிறது. இயற்கை வளத்தை காப்பாற்றினால் மட்டுமே, சிவகங்கை மாவட்டம் இனி வரும் காலங்களில் காப்பாற்றப்படும்.

 

எனவே, பனைமரம் கடத்தல் போன்ற இயற்கை வளங்கள், கனிம வளங்கள் கடத்தல் விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் இதேபோன்ற கண்டிப்பான நடவடிக்கைகளை தொடர வேண்டும் என்பதே, இயற்கை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

கலெக்டர் வேண்டுகோள்!

 

பனைமரம் கடத்தல் போன்ற பசுமை விரோத செயல்பாடுகள் அதிகரித்ததை தொடர்ந்து, பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன் சார்பில், பசுமையை காக்க வலியுறுத்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

அதில், மரங்களைப் பாதுகாப்பது என்பது பொதுமக்களின் கடமையாகும். பழமைவாய்ந்த மரங்களில் பனைமரமும் ஒன்றாகும். அவற்றைப் பாதுகாப்பதில் நம் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு.

 

பொதுஇடங்களில் உள்ள மரங்களை பராமரிப்பதுடன், மரங்களை வளர்க்கவும் முன்வரவேண்டும். இதுபோன்று மரங்கள் வெட்டுவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 

வருங்காலங்களில் பனைமரங்கள் மட்டுமன்றி அனைத்து மரங்களையும் பாதுகாத்து அதன்மூலம் மழை வளம் பெற்றிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon