ஆதார், வங்கிக்கணக்கு விவரங்களை அளிக்குமாறு விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தல்!
ஆதார் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை முறையாக வழங்குமாறு விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வேளாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் தொடங்கப்பட்ட 2018 டிசம்பர் தொடங்கி தற்போது வரை 39 லட்சத்து 63 ஆயிரம் விவசாயிகளுக்கு 5 தவணைகளில் 3273.07 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சில விவசாயிகள் தங்கள் ஆதார் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை முறையாக அளிக்காததால் அவர்களால் இந்த திட்டத்தில் பயன்பெற முடியவில்லை என்றும் வேளாண் துறை கூறியுள்ளது. இதையடுத்து ஆதார் அட்டையில் உள்ளபடி பிரதம மந்திரி கிசான் வலைதளத்தில் பெயர் திருத்தம் செய்து கொள்ளுமாறு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும் சரியான வங்கிக் கணக்கு விவரங்கள் ஐஎஃப்எஸ்சி கோட் ஆகியவற்றை அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டு இருப்பதால் மூன்று மற்றும் நான்காம் தவணை கிடைக்காதவர்கள் அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தையோ, பொது சேவை மையத்தையோ அல்லது தங்கள் பகுதி வேளாண் கண்காணிப்பாளர்களையோ தொடர்பு கொள்ளுமாறு வேளாண்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 73 ஆயிரத்து 946 விவசாயிகளின் பெயர் ஆதாரில் உள்ளபடி திருத்தம் செய்யப்பட்டு இருப்பதாக வேளாண் இயக்குனர் கூறியிருக்கிறார். புதிய விவசாயிகள் பதிவுசெய்யவும், தவணை தொகை கிடைக்காத விவசாயிகள் தங்கள் பெயரை ஆதாரில் உள்ளபடி திருத்தம் செய்யவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும் வேளாண் இயக்குனர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






