ஜெயலலிதாவின் இல்லத்தை முதல்வர் அலுவலகமாக மாற்ற உயர்நீதிமன்றம் பரிந்துரை!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தில் ஒரு பகுதியை மட்டும் நினைவிடம் ஆக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
ஜெயலலிதாவின் சொத்துக்கள் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் அப்துல் குத்தூஸ் கொண்ட அமர்வு போயஸ் தோட்ட இல்லத்தை முழுமையாக நினைவு இல்லமாக்கும் திட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியது.
வேதா நிலைய இல்லத்தின் ஒரு பகுதியை நினைவு இல்லமாக மாற்றி விட்டு மற்றொரு பகுதியை முதல்வரின் அதிகாரப்பூர்வமாக மாற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர். ஜெ தீபா மற்றும் தீபக் ஆகிய இருவரையும் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு இரண்டாம் நிலை வாரிசுகளாக அறிவித்த நீதிபதிகள் அவர்களுக்கு 24 மணி நேரமும் காவலர்கள் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க தனியாக ஒரு நிர்வாகியை நியமிக்க கோரி தொடுக்கப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். பரிந்துரைகள் குறித்து 8 வாரங்களில் தமிழக அரசு பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.






