திருப்பத்தூர் அருகில் வெறி நாய்கடியால் 5 வயது சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி…!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள காட்டாம்பூரில் வசித்து வரும் ராஜா என்பவரின் 5 வயது மகன் ராகுல் ராஜ். இந்த சிறுவனின் வீட்டின் முன்பு இரண்டு நாய்கள் சண்டை போட்டுக்கொண்டு வந்துள்ளது. சண்டை போட்டுக் கொண்டிருந்த அந்த இரண்டு நாய்களும் எதிர்பாராதவிதமாக திடீரென ராகுல் ராஜ் மீது பாய்ந்து முகம் தலை பின்பகுதி என உடலின் பல பகுதிகளில் கடித்து குதறியது.
இச்சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சிறுவனை மீட்டு உடனடியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் சிறுவனுக்கு முதலுதவி அளித்து பின்பு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் . இச் சம்பவத்தால் அப்பகுதி சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இது போன்ற நிகழ்வுகளிலிருந்து மக்களை பாதுகாத்து கொள்ள பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் மூலமாக கிராம பகுதிகளில் சுற்றித்திரியும் வெறி நாய்களை அடையாளம் கண்டு அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.






