--- --:--:-- --

அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆட்டு மந்தைகளைப்போல் தனியார் வாகனங்களில் கூட்டமாக ஏற்றப்பட்டு ரயில் நிலையத்திற்கு அழைத்து செல்லப்படும் புலம் பெயர் தொழிலாளர்கள் !!!

17

கோவையில் இரண்டாம் கட்டமாக சிட்கோ, சுந்தராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிந்து வந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா வைரசின் தாக்கத்தால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் வட மாநிலங்களில் இருந்து கோவையில் தங்கி பணியாற்றி வந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு புலம் பெயர் தொழிலாளர்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணியினை முடுக்கி விட்டுள்ளது.

 

அதன் ஒரு பகுதியாக நேற்று கோவையில் தனியார் தொழிற்சாலைகளில் பணியாற்றி வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் 1140 பேர் போதிய உணவு கொடுக்கப்பட்டு,உரிய பரிசோதனைகளுக்கு பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் செலவில் இரயில்களில் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

இரண்டாம் கட்டமாக இன்றும் கோவையில் சிட்கோ,ஈச்சனாரி, சுந்தராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தங்கி பணியாற்றி வரும் வட மாநில தொழிலாளர்கள் நேற்று இரவு சுந்தராபுரம் தனியார் திருமணமண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை அனைவரும் பாதுக்காப்பாக இரயில் நிலையம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனையடுத்து மாலையில் செல்லும் சிறப்பு இரயில் மூலம் அனைவரும் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர். இதனையடுத்து உத்திரப்பிரதேச மாநிலம் செல்ல உள்ள தொழிலாளர்களுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளதை அடுத்து மூன்றாவது இரயிலில் செல்லும் பயணிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

 

தமிழக அரசு புலம்பெயர் தொழிலாளர்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் ஒரு சில அதிகாரிகளின் அலட்சியத்தால் புலம்பெயர் தொழிலாளர்கள் ஆட்டு மந்தைகளைப்போல் தனியார் வாகனங்களில் நிற்க கூட இடமில்லாமல் ரயில் நிலையத்திற்கு அழைத்து செல்லப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதனை இன்று கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் கண்கூடாகவே காண முடிந்தது.உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களை ஆட்டு மந்தைகளைப்போல் கூட்டமாக ஏற்றிச்சென்று ரயில் நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர்.இதுகுறித்து அறிவதற்காக கோவை வடக்கு தாசில்தார் மகேஷை பலமுறை தொடர்பு கொண்டும் செல்போனை எடுக்கவில்லை.

தமிழக அரசு புலம்பெயர் தொழிலாளர்களை பாதுகாப்பாக அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் தீவிரம் காட்டி வரும் இவ்வேளையில் அதிகாரிகளில் ஒரு சிலரின் அலட்சியத்தால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் நிலை உள்ளது.இதனை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

Leave a Reply

Right Menu Icon