கொரொனாவுக்கு மருந்து உள்ளதாக பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்ட திருத்தணிகாச்சலம் போலி மருத்துவர்!
கொரொனா வைரஸ் பாதிப்புக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறி வரும் சென்னையைச் சேர்ந்த திருத்தணிகாசலம் என்பவர் ஒரு போலி மருத்துவர் என்று தமிழக அரசின் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரொனாவை ஒழிப்பதற்கான மருந்து தன்னிடம் இருப்பதாகவும் அதற்கு அனுமதி தரவேண்டும் என்றும் திருத்தணிகாசலம் தனது முகநூல் பக்கத்தில் வீடியோவை பதிவிட்டு வருகிறார்.
கொரொனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு இருந்தால் மருந்தை கண்டுபிடித்து விட்டதாக எந்த நாடும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதே வேளையில் உலக சுகாதார அமைப்பும் தடுப்பு மருந்து தொடர்பாக ஆய்வுகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
ஆனால் கொரொனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்து விட்டதாக சென்னை கோயம்பேட்டில் ரத்னா சித்த மருத்துவமனை என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வரும் சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் கூறி வந்தார். பெரும் நோய் தொற்று தடுப்பு சட்டத்தின்கீழ் தவறான செய்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க அரசு அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி திருத்தணிகாசலம் மீது மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்வித் தகுதியோ, முறையான அங்கீகாரமோ, பதிவு இல்லாதவர் திருத்தணிகாசலம் என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.







