அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா…! ஊரடங்கை தளர்த்தக்கோரி போராட்டம்…!
அமெரிக்காவில் கொரொனா பெருந்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நோயை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கை தளர்த்த வேண்டும் என்ற போராட்டங்களும் ஆங்காங்கே வலுத்து வருகின்றன. இதனால் அமெரிக்கா முழுவதும் கொரொனா வேகமாக பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரொனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் கொரொனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் உள்ளது அமெரிக்கா. எனினும் நோயை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கை தளர்த்த வேண்டும் என அமெரிக்க மக்கள் பலர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மறைமுகமாக அவர்களுக்கு ஆதரவு அளிப்பதே போராட்டம் வலுவடைய காரணமாக கூறப்படுகிறது. உயிரிழப்புகள், நோய்த்தொற்றுகள் என சுகாதாரத்தைப் பற்றி எந்த கவலையும் கொள்ளாமல் வாஷிங்டனில் நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டு பொருளாதாரத்தை முடக்கும் ஊரடங்கை மாகாண ஆளுநர் தளர்த்த வேண்டும் என முழக்கம் எழுப்பினர்.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றாதது நோய் பரவலை அதிகப்படுத்தும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. நூற்றுக்கணக்கானோர் ஊரடங்குக்கு எதிராக பேரணி நடத்தினர். டென்வர், கொலராடோ ஆகிய பகுதிகளிலும் தனிமனித இடைவெளியை மதிக்காமல் ஏராளமானோர் போராட்டம் நடத்தினர். அரிசோனாவில் ஏராளமானோர் ஊரடங்கை மீறி நூற்றுக்கும் மேற்பட்ட கார்களில் பயணித்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.
போராட்டங்கள் காரணமாக சில மாகாண ஆளுநர்கள் ஊரடங்கு தளர்த்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் பெரும்பாலான ஆளுநர்கள் கொரொனாவை கட்டுப்படுத்த ஊரடங்கால் மட்டுமே முடியும் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.






