டெல்லியில் ஜனாதிபதி மாளிகை ஊழியருக்கு கொரோனா…! அவசரமாக தனிமைப்படுத்தப்பட்ட 125 குடும்பத்தினர்!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வசிக்கும் பணியாளர்கள் 125 பேரின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எங்கெங்கும் காணினும் கொரோனா என்பது போல, இந்தக் கொடிய தொற்று பரவி உலகத்தையே அலறவிட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் ஜாதி, மதம், இனம், நாடு பாராமலும், மன்னர் முதல் சாமான்யன் என்னும் பாராமல் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

 

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி மீண்டுள்ளனர். ஸ்பெயின் நாட்டு இளவரசி சாரா மரியா உயிரிழந்த சோகமும் நடந்துள்ளது. கண்ணுக்குத் தெரியாத இந்த ஆட்கொல்லி வைரஸ், மனிதர்கள் மூலம் பரவும் விதமே வித்தியாசமாக உள்ளது. இந்த தொற்று உள்ளவர்களுக்கு அறிகுறி இருப்பது தெரியாமலே மற்றவர்களுக்கு பரவி விடுகிறது. இதனால் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி என்று கண்டறியப்பட்டவுடன், முதல் வேலையாக சம்பந்தப்பட்டவர் பணி புரிந்த இடம் மூடப்படுகிறது. அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு சோதனை நடத்தப்படுகிறது.

 

இதனால், கொரோனா அச்சத்தால் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் மிகவும் எச்சரிக்கையுடன் பொது வெளியில் தலை காட்ட வேண்டியுள்ளது. சில தலைவர்கள் தங்களையே தனிமைப்படுத்திக் கொள்வதும் நடந்து வருகிறது. இப்படி உலகெங்கும் பல நாடுகளிலும் இந்த கொரோனா வைரஸ் அனைத்து தரப்பையும் பீதியில் நடுநடுங்க வைத்து வருகிறது.

 

இந்நிலையில், டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வசிக்கும் ராஷ்டிரபதி மாளிகையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பிரமாண்டமான குடியரசுத் தலைவர் மாளிகையில் வசிக்கும் பல்வேறு துறை ஊழியர்களின் 125 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் அனைவருக்கும் கொரோனா பரிசோதனையும் நடத்தப்படவும் உள்ளது.


Leave a Reply