தமிழகத்தின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை!
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தேனி மாவட்டத்தில் பெரியகுளம், தேவதானப்பட்டி, சில்வார்பட்டி, ஜெயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு இடி மின்னலுடன் மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் அந்த பகுதிகளில் குளுமையான சூழல் நிலவியது.
10 நாட்களுக்கு முன்பு மழை பெய்த நிலையில் மீண்டும் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூர், தேவாரம், சிலம்பு சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களிலும் மழை பெய்தது. பலத்த காற்றுடன் பெய்த மழை சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நேற்றிரவு மழை பெய்தது. தென்காசி ரோடு, புதிய பேருந்து நிலையம் கீழ தோப்புபட்டி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. மழை பெய்தபோது தாழ்வான பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது.







