“கொரோனா பரவலை துரிதமாக கட்டுப்படுத்தி சாதித்த நாடுகள்!!” இந்தியாவும் பட்டியலில் இடம் பெறுமா?
கொலைவெறித் தாண்டவமாடும் கொரோனா தொற்றுக்கு உலகின் முன்னேறிய பல நாடுகள் உயிர்களை ஆயிரக் கணக்கில் காவு கொடுத்து வருகின்றன. ஆனால் இந்த கொடிய தொற்று நோயை மேலும் பரவாமலும், அதிக உயிரிழப்புகளையும் சந்திக்காமல் துரிதமாக செயல்பட்டு சாதித்துள்ளன சில நாடுகள் .இதில் ஜெர்மனி, தென் கொரியா, ரஷ்யா,தைவான், ஐஸ்லாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. அந்நாடுகள் எப்படி சாதித்தன என்பதை பார்ப்போம்.
சீனாவில் கடந்தாண்டு டிசம்பரில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய நிலையில் அந்த நாடு அத்தனை சக்திகளையும் பயன்படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்தி விட்டதாக தம்பட்டம் அடிக்கிறது. ஆனால் உண்மையில் சீனாவில் என்ன நடக்கிறது?இந்த வைரஸ் பரவியது எப்படி? என்பது இன்னும் உலக மகா ரகசியமாகவே உள்ளது. ஏனெனில் சீனாவில் நடப்பது கம்யூனிச அரசு.அல்வளவு எளிதில் அந்நாட்டு ரகசியங்களை மற்ற நாடுகளால் கண்டுபிடித்து விட முடியாது.
கொரோனா வைரஸ் சீனாவில் தோன்றி 4 மாதங்களாகி விட்டன. கடந்த 2 மாதங்களாக இந்த வைரஸ் தாக்குதலை சமாளிக்க முடியாமல் உலகின் பணக்கார ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி, மாபெரும் வல்லரசு நாடு என கூறிக்கொள்ளும் அமெரிக்காவே சின்னாபின்னமாகி கிடக்கிறது. தற்போது பெரும் பாதிப்பில் பரிதவித்துக் கிடக்கும் நாடுகள் எல்லாம், கொரோனா வைரஸை எதிர்கொள்வதில் காட்டிய அஜாக்கிரதை தான் காரணமாக பார்க்கப்படுகிறது.
ஆனால், இந்த கொரோனாவை மிக ஜாக்கிரதையுடனும், சமயோசிதமாகவும் துரிதமாக செயல்பட்டு வென்றெடுத்து, பெரும் பாதிப்புகள் நேரிடாமல் சாதித்துள்ளன சில நாடுகள் . அந்த சில நாடுகளின் புள்ளி விபரங்களை பார்க்கலாம்.
தென் கொரியா :
சீனாவின் அருகாமையில் உள்ள நாடுதான் தென் கொரியா. வடகொரியாவுடன் எந்நேரமும் போர்ப் பதற்றுத்துடனே காலத்தை தள்ளி வருகிறது. சீனாவில் கொரோணா வைரஸ் பரவத் தொடங்கியதுமே உஷாராகிவிட்டது. சீனாவில இருந்து வரும் பயணிகளுக்கு தடை போட்டது. பரிசோதனைகளை தீவிரப்படுத்தியது. நோய்த் தொற்று அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தியது. இதற்கு அந்நாட்டு மக்களிடமும் ஒத்துழைப்பு கிடைக்க, பாதிப்பு எண்ணிக்கையை 10 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் முடக்கி விட்டது.

தைவான் :
இதுவும் சீனாவின் எல்லையில் உள்ள நாடுதான். 15 ஆண்டுகளுக்கு முன் சார்ஸ் தொற்று பாதிப்பில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் தைவானும் ஒன்று. சீனாவில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த சில நாட்களிலேயே, கடந்த ஜனவரி முதலே பயணிகளை சோதனையிடுவது, எல்லைகளை மூடுவது என கெடுபிடி சோதனைகளை நடத்தியது. கட்டுப்பாடுகளை மீறு வோருக்கு அபராதங்களை விதித்தது. இதனால் அந்நாட்புல் இதுவரை கொரோனா பாதிப்பு 395 மட்டும் தான். 6 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.
ஜெர்மனி :
ஐரோப்பிய நாடுகளில் முக்கியமான ஜெர்மனியில், கொரோனா தொற்றுக்கு இதுவரை ஆளானோர் 1.4 லட்சம் பேர் ஆவர். ஆனால் ஜெர்மனிக்கு அருகிலுள்ள மற்ற ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரில் 10 முதல் 15 சதவீதம் வரை உயிரிழந்து வருகின்றனர். ஆனால் ஜெர்மனியில் 4,100 பேர் மட்டுமே இறந்துள்ளனர், இது 3 சதவீதத்திற்கும் குறைவாகும். இதற்கு காரணம் ஜெர்மனியில் சுகாதாரத் துறை மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான். கொரோனாவை எதிர்கொள்ள போதிய மருத்துவ உபகரணங்கள், படுக்கை வசதிகள் என அனைத்தையும் முன்கூட்டியே தயார் படுத்தியதுடன், சோதனைகளை துரிதமாக்கியதே உயிரிழப்பை கட்டுப்படுத்த காரணமாக இருந்தது.
இது போன்று மற்றொரு ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்திலும் 1700 பேருக்கு தொற்று உறுதியானாலும், உயிரிழப்பு வெறும் 8 பேர் மட்டுமே. இதற்கு அந்நாடு பிற ஐரோப்பிய நாடுகளுடனான எல்லைகளை மூடியதுடன், நாட்டு மக்களில் 50% பேருக்கு சோதனை நடத்தியதும் கொரோனா மேலும் பரவாமல் தடுக்க காரணம் என்று கூறலாம்.
ரஷ்யா:
சீனாவின் மேல் பகுதியில் பரந்து விரிந்து காணப்படும் ரஷ்யாவும் கொரோனா பிடியிலிருந்து தப்பித்துள்ளதாக கூறலாம். அந்நாட்டில் 32 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பலி எண்ணிக்கையை 273 என கட்டுப்படுத்தியுள்ளது. இது மொத்த கொரோனா பாதிப்பில் உயிரிழப்பு என்பது ஒரு சதவீதத்திற்கும் குறைவாகும். இதற்கு காரணம் ரஷ்யா மேற்கொண்ட துரித பரிசோதனைகள் தான். விறுவிறுவென 17 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோணா பரிசோதனை மேற்கொண்டுள்ள ரஷ்யா,அதி நவீன சிகிச்சை வசதிகளையும் தயார் செய்ததே உயிரிழப்பை கட்டுப்படுத்தியதுடன், கொரோனா பரவலை தடுக்கவும் காரணமாகி விட்டது.
ஆஸ்திரேலியா:
பரப்பளவில் மிகப் பெரிய தீவு நாடான ஆஸ்திரேலியாவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் வைத்துள்ளது. அங்கு இதுவரை 6560 பேர் பாதிப்புக்குள்ளானாலும் உயிரிழப்பு வெறுமனே 69 மட்டுமே. இதுவும் கிட்டத்தட்ட ஒரு சதவீதம்தான். ஆஸ்திரேலியாவிலும் அதிகம் பேரிடம் பரிசோதனைகளை தீவிரப்படுத்தியதே கொரோனா தொற்றை பரவ விடாமல் தடுக்க மற்றொரு முக்கிய காரணம்.

சிங்கப்பூர் :
ஆசியாவில் உள்ள சின்னஞ் சிறு தீவு நாடான சிங்கப்பூருக்கும், சீனாவுக்கும் தொடர்புகள் அதிகம். இங்கு வசிப்பவர்களில் 70% பேர் சீனர்கள் தான். அடுத்தபடியாக தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். சுற்றுலா மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் கொடி கட்டிப் பறக்கும் சிங்கப்பூரில் எப்போதுமே கடுமையான சட்ட திட்டங்களும், கெடுபிடிகளும் அதிகம். அதனை அந்நாட்டு மக்களும் தவறாமல் பின்பற்றுவதும் உண்டு. சீனாவில் கொரோனா பரவத் தொடங்கியதுமே உஷாரானது சிங்கப்பூர் அரசு . மக்களை அக்கறையுடன் எச்சரித்து விழிப்பை ஏற்படுத்தியது. முன் கூட்டியே ஊரடங்கை அறிவித்து, ஒட்டு மொத்த மக்களுக்கும் தேவைக்கு அதிகமாகவே நிவாரணம் அறிவித்து, வீட்டுக்குள் முடங்கச் சொன்னது அந்நாட்டு அரசாங்கம். பரிசோதனைகளையும் அதிகப்படுத்தியது. இதன் விளைவு சிங்கப்பூரில் பாதிப்பு 5050 என்றாலும், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை வெறுமனே 11 பேர் மட்டும் தான். இது வெறுமனே 0.2% மட்டும் தான் என்பது ஆச்சர்யம்தான்.
இப்படி கொரோனாவை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடுகளும் விதவிதமான நடவடிக்கைகளை கையாண்டாலும் மிக முக்கியமானது துரித நடவடிக்கைகள் தான். மேலும் கொரோனா சோதனைகளை தீவிரப்படுத்தி நோய்த் தொற்று உள்ளோரை கண்டறிவது, அவர்களின் தொடர்புகளை தனிமைப்படுத்துவது தொடர்ந்து கண்காணிப்பது, ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்தி சமூக விலகலை கடைப்பிடிக்கச் செய்வது போன்றவை மிக முக்கியமான நடவடிக்கைகள் ஆகும். ஆனால், மக்களின் ஒத்துழைப்பும் மிக மிக அவசியம். இதெல்லாம் சாத்தியமானதால் தான் இந்த நாடுகள் ல் கொரோனாவை கட்டுப்படுத்துவது சாத்தியமாகி உள்ளது.
மக்கள் தொகையில் உலகின் 2-வது பெரிய நாடான இந்தியாவில் தற்போது தான் கொரோனா தன் ஆட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. நம் நாட்டிலும் பரிசோதனைகளை தீவிரப்படுத்துவது, கட்டுப்பாடுகளை கெடுபிடியாக அமல்படுத்துவது, சிகிச்சை வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தினால் மட்டுமே கொரோனா என்னும் அரக்கனின் பிடியிலிருந்து தப்பிப் பிழைக்க முடியும் என்று பார்க்கப்படுகிறது. அப்படி தப்பிப் பிழைக்குமா? என்பது அடுத்த 2 , 3 வாரங்களில் தெரிந்து விடத்தான் போகிறது.






