--- --:--:-- --

குற்றம் குற்றமே செய்தி எதிரொலி; திருமுருகன்பூண்டி அருகே கொரோனா வைரஸ் நோய் பரவலாம் என்கிற பயத்தில் ஏற்படுத்திய தடுப்புகள் அகற்றம்!

1

திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி பேரூராட்சி 7 வது வார்டில் காமாட்சியம்மன் நெசவாளர் காலனி உள்ளது. இங்கு 260 க்கும் மேற்பட்ட வீடுகளில் 600 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இங்குள்ளவர்கள் அனைவரும் விசைத்தறி தொழிலாளர்கள். இவர்களுக்கு இப்பகுதியை ஒட்டி அப்போதைய 4-செட்டிபாளையம் பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட தடத்தில் வழி ஏற்படுத்தி இன்று வரை இந்த ரோட்டை பிரதான ரோடாக பயன்படுத்திய வருகிறார்கள்.

 

மேலும் இப்பகுதிக்கு எதிரே இருந்த காடுகள், தோட்டங்கள் சைட்டுகளாக பிரிக்கப்பட்டு நெசவாளர் காலனி விரிவாக்கம் என பெயரிட்டு தற்போது அப்பகுதி முழுவதும் வீடுகள் கட்டப்பட்டு அதன் உரிமையாளர்கள் குடியிருந்து வருகிறார்கள். அப்பகுதியில் உள்ள ரோடுகள் குறுகளானவை.  அதேபோல் காலனிக்கு இடது புறத்தில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ரேடியஸ் அவென்யூ என்ற பகுதி புதிதாக ஏற்படுத்தப்பட்டு அங்கும் 30 மேற்பட்ட வீடுகளும்,  இந்த இடத்திற்கு எதிரே உள்ள தோட்டத்தில் லைன் வீடுகள் கட்டப்பட்டு அங்கு பனியன் கம்பெனியில் வேலைசெய்து வரும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்கி உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்த பிரதான சாலையையே வேலைக்கு செல்வதற்கும், பிற தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் 4-செட்டிபாளையம் பஞ்சாயத்து திருப்பூர் மாநராட்சியுடன் சேர்க்கப்பட்டதால் திருமுருகன்பூண்டி  பேரூராட்சி எல்லைப்பகுதியில் திருப்பூர் மாநகராட்சி 2 வது வார்டில் இந்த பிரதான சாலையையொட்டி சூர்யா நகர் ஏற்படுத்தப்பட்டு தற்போது அங்கு 30 க்கும் மேற்பட்டோர் வீடுகள் கட்டி வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் சூர்யா நகரில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற பயத்தில் அப்பகுதியில் குடியிருந்து வரும் சிலர் கடந்த 13 ந் தேதி  காலை 12 மணியளவில் பூண்டி ரிங்ரோட்டில் இருந்து நெசவாளர் காலனிக்கு  செல்லும் பிரதான ரோட்டை முற்றிலும் அடைத்தவாறு பேரிக்காடுகளை வைத்தும், முட்களை  கொண்டும் அடைத்துவிட்டனர்.

 

அத்துடன் நெசவாளர் காலனி தொடங்கும் இடத்திலும் பைப்புகள் மற்றும் முட்களை போட்டு அடைத்துவிட்டனர்.  இதனால் நெசவாளர் காலாணி பொதுமக்கள் அக்காலனியை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். மேலும் இதுகுறித்து நெசவாளர் காலனி மக்கள் சிலர் சூர்யா நகர் பகுதி மக்களிடம் சென்று தடைகளை அப்புறப்படுத்த கேட்டனர். ஆனால் அவர்கள் தடைகளை அப்புறப்படுத்த மறுத்ததோடு திட்டி அனுப்பிவிட்டனர். இதனால் நெசவாளர் காலனிக்கு வரும் காய்கறி வண்டிகள், கேஸ் வண்டிகள் வராமலும், மேலும் இருசக்கர வாகனங்களில் கூட செல்லமுடியாமல் விரிவாக்கம் பகுதியில் உள்ள குறுகலான ரோட்டை பயன்படுத்தி வந்தனர். இதனால் அப்பகுதி மக்கள் கடும் துயரை சந்தித்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து 14 ந் தேதி மாலை இருதரப்பினர் சார்பில் 100 க்கும் மேற்பட்டோர் அந்த தடைகள் வைக்கப்பட்ட பகுதியில்  ஒன்றுகூடி தடைகளை அகற்ற சொல்லி வாக்குவாதம் செய்தனர். அப்போது பிரதான சாலையை தடை செய்ய உங்களுக்கு யார் அதிகாரமே கொடுத்தார்கள்? அப்படி தடை ஏற்படுத்த வேண்டும் என்றால் உங்கள் பகுதியில் உள்ள குறுக்கு சாலைகளை  தடுத்துக்கொள்ள வேண்டியது தானே? மேலும் முழுரோட்டையும் அடைக்காமல்  2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் செல்ல வழியாவது ஏற்படுத்தி தராமல் எப்படி அடைக்கலாம்?  மேலும்  பெட்ரோல் பங்கிற்கு சென்று பெட்ரோல் அடிக்க சுமார் ஒரு கிலோமீட்டர் சுற்றி செல்லவேண்டியுள்ளது. அந்நியர்கள் யாராவது வருவது குறித்து சந்தேகம் இருந்தால் போலீசில் புகார் செய்து போலீசார் மூலம் அவர்களை தடுத்து நிறுத்தலாம் என்று பேசி பார்த்தனர். ஆனாலும் சூர்யா நகர் பகுதியினர் தடையை அகற்ற மறுத்துவிட்டனர்.

 

அதனால் இருதரப்பினருக்கும் இடையே பகை ஏற்பட்டது. இதனால் இப்பிரச்சினை பெரிதாக்குவதற்குள் போலீசாரே அல்லது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளோ தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று நெசவாளர் காலனி பொதுமக்களின்  வேண்டுகோளாக இருந்தது. இதுகுறித்து “குற்றம் குற்றமே” புலனாய்வு வார இதழில் படத்துடன் செய்தி வந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 3 நாட்களாக சூர்யா நகர் பகுதி மக்களுக்கும், நெசவாளர் காலனி அ.தி.மு.க பிரமுகர் மோகன், முன்னாள் கவுன்சிலர் ஐயப்பன் ஆகியோர் பலதடவை பிரச்சினையின் சாராம்சம் குறித்து விளக்கி பேசினார். முன்னேற்றம் ஏற்படவில்லை.

தொடர்ந்து நேற்று காலையும் பேச்சுவார்த்தை நடந்தது.  அதில் தி.மு.க 7 வது வார்டு செயலாளர் மூர்த்தி சூர்யா நகர் மக்கள் சார்பில் கலந்து கொண்டவர்களிடம் நீங்கள் பிரச்சினையை பெரிதாக்குகிறீர்கள். அரைமணி நேரம் டைம் தருகிறோம். நீங்கள் அப்புறப்படுத்தாவிடில் நாங்களே அப்புறப்படுத்துவோம் என கடுமையாக எச்சரித்து பேசினார். அப்போது அங்கு வந்த போலீசார் நாங்கள் தடை ஏற்படுத்த அனுமதி தரவில்லை. பூண்டி பேரூராட்சி அதிகாரிகள் முன்னிலையில் பேசி  முடிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறி சென்று விட்டனர். இந்தநிலையில் விரிவாக்கம் பகுதியில் உள்ள 2 குறுக்கு சாலைகளை அப்பகுதி மக்கள் யாரும் செல்லாதவாறு தடை ஏற்படுத்தினர். இதனால் நேற்று காலை 11 மணிக்கு முதல் நெசவாளர் காலனி பொதுமக்கள் எங்கும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று கூட பரபரப்பும் ஏற்பட்டது.

 

இதனைத்தொடர்ந்து திருமுருகன்பூண்டி பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரனுக்கு தகவல் தர அவரது  மேற்பார்வையில் பிரச்சினைக்குரிய பகுதியை கொரோனா வைரஸ் சிறப்பு அதிகாரி இன்ஜினீயர் பழனிசாமி நேரில் வந்து பார்வையிட்டு நெசவாளர் காலனி அ.தி.மு.க பிரமுகர் மோகன் மற்றும் தி.மு.க 7 வது வார்டு செயலாளர் மூர்த்தி மற்றும்  பொதுமக்களிடம் பிரச்சினை குறித்து கேட்டறிந்தார். பின்னர் தேவையில்லாமல் அத்துமீறி போடப்பட்ட இருந்த தடையை அகற்ற உத்தரவிட்டார். உடனே பூண்டி பேரூராட்சி தூய்மை பணிகள் மேஸ்திரி ரவி தலைமையில் தூய்மை பணியாளர்கள் மற்றும் இளைஞர்கள் உதவியுடன் தடுப்புக்காக போடப்பட்டு இருந்த பைப்புகள், முட்கள் ஆகியவற்றை அகற்றினர். இதைத்தொடர்ந்து ரிங் ரோட்டில் போடப்பட்டு இருந்த தடைகளையும் அகற்றினர்.

பின்னர் சூர்யா நகர் பகுதி பொதுமக்களிடம் தேவையில்லாமல் பொதுரோட்டிலோ அல்லது மெயின் ரோடுகளிலோ  தடைகளை ஏற்படுத்தக்கூடாது. தற்போது தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. முகத்தில் முகக்கவசம் அணிந்து தான் வெளியே வரவேண்டும். மற்ற பிரச்சினைகள் இருந்தால் பூண்டி போலீசில் புகார் செய்து தீர்வு காண வேண்டும் தேவையில்லாமல் இத்தனை பேர்கள் கூடினால் கொரோனா வைரஸ் பாதிப்பு வரலாம். என்று கடுமையாக எச்சரித்து சென்றார். இதனைதொடர்ந்து நெசவாளர் காலனி பொதுமக்கள் அனைவரும் சந்தோஷமாக கலைந்து சென்றனர்.

Leave a Reply

Right Menu Icon